Step into an infinite world of stories
Fiction
இவருடைய கதைகளை ஒரு மலைப் பிரதேசத்து தாவரத்தையும், நெடிய மரத்தையும், பனிப்புகையையும், சமவெளிகளில் அறிய இயலாத குளுமையுடன் மலர்ந்திருக்கிற புதிய வண்ணங்களுடைய பூக்களையும் அணுகுவது போன்றே அணுக வேண்டும். அதுவும் தாவர இயலாளனைப் போல அல்ல. ஒரு உல்லாசப் பயணம் போகிற, ஒவ்வொரு ஸ்டேஷனையும் டயரியில் குறித்துக் கொள்கிற, வியப்புக்குரிய புதிய புதிய எல்லைகளுள் பிரவேசித்து அதிலே பிரமிப்புண்டு கரைந்து, கரையற்ற மகிழ்வின் பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்படுகிற பையனின் மனதுடனேயே அணுக வேண்டும்.
கார்த்திகா அவர் பிறந்து வளர்ந்த மலையகத்தினூடே நடந்து சென்று கொண்டே இருக்கிறார். அப்படிச் செல்கிற போக்கில் வந்தடைகிற அனுபவங்களை, 'கல்யாணச் சந்தடியில் பாலுக்கு அலையும் பூனைக் குட்டியென' அடையாளங் கண்டு பரிவுடன் எடுத்து அதன் புசுபுசுத்த ரோமங்களின் மேல் தட்டிக் கொடுக்கிறார். இவர் சாட்சியாக நிற்கும் எந்த அனுபவங்களையும் கேள்விகளுக்கோ விசாரிப்புக்கோ உட்படுத்தாமல் அவரின் இடது வலது பக்கங்களில் நீரோடையென விரைந்தோட விட்டுக் கொண்டு நிற்கிறார். அவருடைய வசிப்பிடமோ மலை. மலையிலிருந்து விளையாட்டாகச் சரிவதும் ஏறுவதும் ஆன எழுத்துக்கள் வசீகரமாக இருக்கின்றன. யாரையும் சந்தேகிக்காத, உற்றுப் பார்த்து தன்னை ஜாக்கிரதைப்படுத்திக் கொள்ளாத, சதா குதூகலித்துக் கொண்டிருக்கிற, இடையில் குறுக்கே கையைக் காட்டி நிறுத்தி, 'இங்கே வா. உன் பெயர் என்ன' என்று விளையாட்டாக மிரட்டினால் கண்கலங்கி விடுகிற பூங்காக் குழந்தைகள் போன்றவை இவருடைய கதைகள்.
அனுபவங்களின் லகரி அல்லது உசுப்பல்கள் அல்லது தொந்தரவுகள் நம்மை ஒரு யாத்திரைக்கு தயார்ப்படுத்துகின்றன. சரி என நாம் புறப்பட்டு எழுத்தில் நாலு எட்டு எடுத்து வைப்பதற்குள் அனுபவம் தூண்டின யாத்திரையும் நாம் சென்று கொண்டிருக்கிற திசையும் ஒன்றில்லையோ என்ற திகைப்பு வந்து விடுகிறது. இது வெவ்வேறான விகிதங்களில் எல்லாக் கலைஞனுக்கும் நிகழ்கிறது. நிர்ணயித்த இடமும், சென்றடைந்த இடமும் ஒன்றாக வாய்க்கப் பெறுகிற சாத்தியம் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. எனினும் ஒவ்வொருவரும் தத்தம் வரிகளின் மேல் துவங்கும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். கார்த்திகாவும் அப்படிப் போகிறார். அவருடைய பாத்திரங்கள் போகின்றன.
இந்த வாழ்க்கையை பூப்போலவும் அன்புமயமாகவும், தயையும் பரிவும் நிரம்பிய வெவ்வேறு அடையாளங்களுடன் காட்டுகிற பொழுது அவரை கேள்வி கேட்கத் தோன்றவில்லை. இந்த வாழ்வின் மீது, இப்போது அவர் கொண்டிருக்கிற நிலைகளுக்கு எதிரான கேள்விகள் அவருக்கே எழும் போது, மனம் திறந்து விசாரித்துச் சரியான பதில்களை ஒப்புக் கொள்வதில் அவர் தயக்கம் காட்டமாட்டார் என்கிற அளவுக்கு மிகுந்த ஒப்புதலுடனும், திறந்த மனத்துடனும் இருப்பதை இந்தக் கதைகளில் பெரும்பான்மை உணர்த்துகின்றன. முக்கியமாக-'பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது' வாழ்க்கை நம்மை ஒரு சமயம் எவாஞ்சலின் டீச்சராகவும், பிறிதொரு சமயம் எபியாகவும் வைத்து வரும் நிலைத்த சத்தியமாக இருக்கிறது. இந்த சத்தியத்தின் திடத்தினையும், மென்மையினையும் அற்புதமாக ஒரு அமைதியுடன் சொல்லி இருக்கிறார். எழுத்தில் இந்த அமைதி கூடுகிற தருணம் அவருக்கு இதில் வாய்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 'இடைவெளி' 'மனது', 'நனையத் தோன்றுகிறவர்கள்' - ஆகிய எழுத்துக்கள் அது போன்ற விசாரிப்பின் அடையாளங்களுடன் இருக்கின்றன.
இந்த அடையாளங்கள் பெருகித் தீவிரமடையும் போது உணர்வு மயமான அடிப்படைப் பரவசங்கள் பின் வாங்கி சப்தம் அனைத்தும் அடங்கிய நிசியில் புதரில் மறைவாய்ப் பூத்த பூப்போல வாசம் எழுப்பிக் காலத்தின் நாசியைக் கவ்வுகிற மலர்ச்சி நிரம்பிய வரிகள் விகசிக்கும். அதெல்லாம் ஒருபுறம் இருக்க...
சகல திசைகளிலிருந்தும் எறியப்படுகிற முட்பந்துகளால் எற்றுண்டு நசுங்குகிறதாகவும் ஒரு காலை உருவும் யத்தனிப்பில் இன்னொரு கால் முன்னைவிடவும் மீள முடியாதபடி சிக்கிக் கொள்கிற ராட்சசச் சிலந்தி வலையாகவும், தத்துவங்களின் சூறைக் காற்றில் சூட்சுமக் கயிறுகள் அறுந்து எங்கோ போய் விழுந்து கிடக்கிற சீரழிவுகளின் பள்ளத்தாக்காகவும் எல்லாம் இந்த வாழ்வு மிகச் சிக்கலான அடைமொழிகளுடன் வர்ணிக்கப்படும்போது, மிகவும் எளிதாகப் பூக்களின் அண்மைக்கு இப்படிச் சில சிறுகதைகள் அழைப்பது, ஒப்புக் கொள்ளக்கூடிய இன்னொரு பக்க நிஜமாக இருக்கிறது. அப்படி அழைக்கிறவராக ராஜ்குமார் இருக்கிறார்.
அவருக்கு வாழ்த்துக்கள்
- வண்ணதாசன்
Release date
Ebook: 10 December 2020
English
India