Step into an infinite world of stories
History
'பாண்டி மாதேவி' என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் ஒன்றிப்போய்த் திளைத்திருந்த நேரம்.
நீலக்கண்ணாடிப் பாளங்கள் போல் அலை யெழும்பி மின்னி ஒசையிட்டுப் பரந்து தென்படும் கடலும், அதன் கரையும், காலை மேளமும் நாதசுவரமும், ஒலித்துக் கொண்டிருக்கும் குமரித் தெய்வத்தின் கோவிலும்-என் மனத்தில் பல்லாயிரம் எண்ணப் பூக்களை மலரச் செய்தன. இப்போது தென் கடலாக மாறிவிட்ட இந்த நீர்ப்பரப்பின் எங்கோ ஒரு பகுதியில் தமிழ் நாகரிகம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வீறெய்திய நினைவு தோன்றிற்று. குமரித் தெய்வம் குன்றா அழகுடன் கன்னிமைக் கோலம் பூண்டு நின்று தவம் செய்யும் தென்பாண்டிச் சீமையின் வரலாற்று வனப்புக்கள் எல்லாம் நினைவில் வந்து நீளப் பூத்தன. 'தென்பாண்டிநாடு', ‘புறத்தாய நாடு’ - 'நாஞ்சில் நாடு’ என்றெல்லாம் குறிக்கப்படும் வளம் வாய்ந்த நாட்டின் சூழலை ஒரு வரலாற்று நாவலில் புனைந்து போற்ற வேண்டுமென்ற ஆவல் அன்று அந்தக் காலை நேரத்தில் கன்னியாகுமரிக் கடற்கரையில் என் மனத்தில் எழுந்தது. அதன்பின் சிறிது காலம் அந்த ஆவல் நெஞ்சினுள்ளேயே கனிந்து, கனிந்து ஒரு சிறிய தவமாகவே மாறிவிட்டது. அந்தத் தவத்தோடு பல நூல்களைப் படித்தேன். பலமுறை தென் பாண்டி நாட்டு ஊர்களில் சுற்றினேன். மேலைச் சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும், படித்துக் கொண்டிருந்த காலங்களிலேயே எனக்கு வரலாற்று அழகுகளிலும், அவை தொடர்பான கற்பனைகளிலும் திளைக்கும் ஆர்வம் உண்டு. பின்பு இந்த ஆர்வம் வளர்ந்து பெரிதான காலத்தில் நண்பர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் இதை மேலும் வளர்த்தார்கள்.
கன்னியாகுமரிக் கடற்கரையில் அன்று நான் கண்ட கனவுகள் நனவாகும்படி வாய்ப்பளித்து உற்சாகமூட்டியவர் கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்கள் ஆவார். 'பாண்டிமாதேவி-என்னும் இந்த வரலாற்று நாவலைக் கல்கியில் ஒராண்டுக் காலம் வரை வெளி வரச் செய்து ஊக்க மூட்டியவர் அவர்தாம். பேராசிரியர் கல்கி அவர்கள் தம்முடைய மாபெரும் சரித்திர நாவல்களால் அழகு படுத்திய இதழ் கல்கி. அந்த இதழில் பாண்டிமாதேவியும் வெளியாகி அழகு படுத்தினாள் என்பதை நினைக்கும்போது எனக்குப் பெருமையாயிருக்கிறது.
இனி இந்த நாவலுக்கான சரித்திரச் சாயல்களைப் பற்றிச் சில கூறவேண்டும். திரு.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய பாண்டியர் வரலாறு துரலில் கி.பி.900 முதல் 1190 வரையில் ஆண்ட பாண்டியர்கள்-என்ற தலைப்பின் கீழ் மூன்றாம் இராசசிம்ம பாண்டியனைப் பற்றிக் காணப்படுகிறது. மூன்றாம் இராசசிம்ம பாண்டியனைப் பற்றிய சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்புக்களும், வேறு சில மெய்க் கீர்த்திக் குறிப்புக்களும் எனக்குப் பயன்பட்டன. மேலும் கடிதம் எழுதிக் கேட்டபோதெல்லாம் பண்டாரத்தவர்கள் சிரமத்தைப் பாராமல் ஐயம் நீக்கி உதவியிருக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சூழ்நிலையைப் பின்புலமாகக் கொண்டு இன்னும் சில இன்றியமையாத குறிப்புகளையும், பாத்திரங்களையும், கதைக்காகப் புனைந்து கொள்ள வேண்டியிருந்தது. கதை நிகழும் முக்கியக் களமாகத் தென்பாண்டி நாட்டை அமைத்துக்கொண்டேன். கதையின் பிற்பகுதியில் ஈழநாட்டுப் பகுதிகளும் பின்புலமாக அமைந்தன. இந்த வரலாற்றுப் பெருங்கதையில் யான் பல ஆண்டுகளாகப் படித்த தமிழ் இலக்கியக் கருத்துக்களையும், ஆழமான தத்துவங்களையும் அங்கங்கே இணைத்திருக்கிறேன். தமிழ் நாட்டின் பழைய வாழ்க்கை மரபுகளையும், ஒழுகலாறுகளையும் கவனமாகவும், பொருத்தமாகவும் கையாண்டிருக்கிறேன். ஆனால், கதையின் சுவையும், விறுவிறுப்பும் கெடாதவாறு பாலில் குங்குமப்பூ போல அவற்றைக் கரையச் செய்திருக்கிறேன். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகள் எளியேனுடைய இந்தக் கதையை ஆர்வத்தோடு படித்து நேரில் கூப்பிட்டும் ஆசியுரை அருளினார்கள். மறக்க முடியாத பாக்கியம், பெரியவர்களின் இந்த ஆசியுரைதான். இதை எக்காலத்தும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டியவன் நான்.
இறுதியாக இப்படி ஒரு கதையை எழுதும் திடத்தையும் ஆற்றலையும் அளித்து என்னை யாண்டருளிய இறைவனுக்கு வணக்கம் தெரிவித்து என் முன்னுரையைத் தெய்வத் தியானத்தோடு முடிக்கிறேன்.
Release date
Ebook: 20 July 2022
English
India