Step into an infinite world of stories
‘இந்த ரங்கராஜன் சுத்த மோசம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் தனக்குள்ளேயே ஒளித்து வைத்துக் கொள்வார். மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்கிற எண்ணம் கிடையாது' என்று அமரர் எஸ்.பி. உதவி ஆசிரியர்களிடமும்… நண்பர்களிடமும் அடிக்கடி சொல்வார். வேடிக்கையாக அல்ல. சீரியஸாகவே சொல்லும் பேச்சு அது. எனக்குப் பல விஷயங்கள் தெரியும் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை கேட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு என்னிடம் எரிச்சல் வருவது உண்டு, அவரிடமே அதை ஆட்சேபித்தவர்களும் உண்டு.
“எனக்கென்று என்ன சார் தனியாகத் தெரியும்? எல்லாம் நீங்கள் சொல்லித் தந்ததுதானே” என்று நான் பதிலளித்தால் ஒப்புக் கொள்ளமாட்டார். குறிப்பாக, சிறுகதைகளும் நாவல்களும் எப்படி அமைக்க வேண்டும், என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படைகளை நான் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்றும், ஆனால் பிற எழுத்தாளர்களின் கதைகள் வரும்போது அவற்றைத் திருத்தவோ மாற்றவோ நான் யோசனை சொல்வதில்லை என்றும் அவர் எண்ணினார். அதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.
“எப்படிக் கதை எழுதுவது?” என்பது குறித்து ஆங்கிலத்தில் வெளியான நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கி வந்து தானும் படித்து என்னையும் படிக்கச் சொல்வார். வாசகர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய கதையம்சம் நிறைந்த சிறுகதைகளை எழுதுவதிலும் வெளியிடுவதிலும், அவர் தனி ஆர்வம் கொண்டிருந்தார்.
அவர் சொல்லித் தந்த உத்திகளையும் படிக்கக் கொடுத்த புத்தகங்களையும் கொண்டு எனக்கு ஜனரஞ்சகமான கதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது யாருக்கும் எதுவும் சொல்லித் தருவதில்லை என்று எஸ்.ஏ.பி கேலி செய்துகொண்டே இருந்ததால், ஏன் நாம் அஞ்சல் வழியில் கதை எழுதச் சொல்லித்தரக்கூடாது என்று எண்ணினேன். எஸ்.ஏ.பியிடம் அதைச் சொன்னபோது, ‘முதலில் குமுதத்தில் வாராவாரம் எழுதுங்கள்' என்று கட்டளையிட்டார்.
'பிரபலமான தமிழ் எழுத்தாளர்களின் கதைகளைப் படித்து மேற்கோள் காட்ட வேண்டும். அதற்கெல்லாம் டயம் வேண்டும்...” என்று நான் தயங்கினேன். 'யாருடைய கதையையும் மேற்கோள் காட்டத் தேவையில்லை. உங்கள் கதையை நீங்கள் எப்படி எழுதினீர்கள். அதில் சிறுகதைக்கான அம்சங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை எழுதுங்கள். போதும்' என்றூர் எஸ்.ஏ.பி.
என் தகுதிகளில் அவர் வைத்திருந்த நம்பிக்கையைவிட எனக்கு என் மீது நம்பிக்கை கம்மியாகவே இருந்தது. அப்போதும் லஜ்ஜையாகவே இருந்ததால், தலைப்பில் என் பெயரைப் பெரிதாசப் போட்டுக் கொள்ளாமல் கட்டுகரையின் கடைசியில், சின்ன எழுத்தில் போட்டுக் கொண்டேன். மொத்தம் இருபத்தேழு வாரங்களுக்கு அந்தக் கட்டுரைகள் வெளியாகின. அவ்வப்போது திருத்தங்களும் மாற்றங்களும் செய்து தந்தார் எஸ்.ஏ.பி. முதலில் எப்படிச் கதை எழுதுகிறார்கள்? என்று தலைப்புச் தந்தேன்.
பிறகு அதைச் சுருக்கி “எகஎ” என்றே தலைப்பிடத் தொடங்கினேன். அந்தக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தபோதும், முடிந்த போதும் பல இளம் எழுத்தாளர்கள் பலவகையான சந்தேகங்கள் கேட்டார்கள். அவர்களுக்காகவே “எகஎ” என்று அஞ்சல் வழிக் கல்விக் கூடத்தைத் தொடங்கினேன். இந்த வகையில் எனக்கு எத்தகைய அனுபவமும் கிடையாது.
சிறிய அளவில் பத்து வகையான பாடங்களை எழுதி, பயிற்சிகளும் கொடுக்கும்படி யோசனை கூறியவர் எஸ்.ஏ.பி.தான். ஏற்கெனவே பத்திரிகைகளில் கதை பிரசுரமாகி, ஓரளவு எழுத்தி தெரிந்த எழுத்தாளர்களுக்காக வேறு வகைப் பயிற்சியும், எதுவும் தெரியாத ஆரம்ப எழுத்தாளர்களுக்காக வேறு வகைப் பயிற்சியும் அமைக்கும்படி எஸ்.ஏ.பி யோசனை கூறினார்.
‘எழுத்து, பேனா இலக்கியம்' என்று தான் சொன்ன எல்லாப் பெயர்களையும் நிராகரித்து. “எகஎ” என்றே பெயர் வைக்கும்படி சொன்னவரும் அவரே, முதல்வர் என்று நான் பதவியைக் குறிப்பிட்டுச் கொள்ளும்படி சொன்னவரும் அவரே. இந்தப் பாடங்களுக்கு ஒரு “சுலோகம்” இருக்க வேண்டும் என்று கூறி, 'தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்" என்ற பாரதியாரின் பொன்மொழியைத் தேர்ந்தெடுத்துத் தந்தவரும் அவரே. மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவம் அச்சாகி வந்ததும், அவரிடம் கொடுத்து, “தாங்கள்தான் முதல் மாணவராகச் சேர்த்து கெளரவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன் படிவத்தில் கையெழுத்திட்டு முந்நூறு ரூபாய் தொகையும் செலுத்தினார். அந்தப் படிவத்தை இன்று வரை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்.
மூன்று நாலு வருடம் “எகஎ” பள்ளியை நடத்தினேன். சுமார் 2000 மாணவர்கள் பயிற்சி பெற்றார்கள் (தொடர்ச்சியாகப் படித்தவர்கள் சிலரே, பாதி படிப்பதும், பிறகு விட்டு விடுவதுமாக இருந்தவர்கள் பலர்) பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் ‘எகஎ' மாணவர்கள் பலர் பங்கேற்றுப் பரிசு பெற்றார்கள்.
என் குருநாதர்களான கல்விக்கும் எஸ்.ஏ..பி.க்கும் இப்புத்தகத்தைப் பயபக்தியுடன் அர்ப்பணம் செய்கிறேன்.
- ரா.கி.ரங்கராஜன்
Release date
Ebook: 23 December 2019
English
India