Step into an infinite world of stories
அழகப்பச் செட்டியாரைக் கௌரவ ஆசிரியராகக் கொண்டு இரண்டு கல்லூரித் தோழர்கள் - எஸ்.ஏ.பி, பார்த்தசாரதி துணிந்து குமுதம் பத்திரிகையை ஆரம்பித்தபோது அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் வெகு சீக்கிரமே குமுதம் மலர்ந்து மணம் பரப்பி, தமிழர் மனங்களில் ஒரு நிரந்தர இடம் பிடித்துக் கொண்டது. மணத்தை உருவாக்கியவர் எஸ்.ஏ.பி. அதை நாடு நகரமெல்லாம் பரப்பியவர் பார்த்தசாரதி. அயராத உழைப்பு.
ஆசிரியர் 'கல்கி', பத்து குமுதம் இதழ்களைச் சேர்ந்த மாதிரி எடுத்து வைத்துக்கொண்டு பக்கம் விடாமல் படித்து விட்டு, தமது உதவி ஆசிரியர்களை அழைத்து, "நாம் இன்னும் சிறப்பாக இயங்கவில்லையானால் இந்தப் பத்திரிகை வெகு சீக்கிரம் நம்மை முந்திக் கொள்ளும்" என்று சொன்ன அந்த நாளை நினைவு கூர்கிறேன்.
கல்லூரி பாடப் புத்தகத்துக்கு இடையில் குமுதம் இதழை வைத்துக்கொண்டு விரிவுரையாளருக்குத் தெரியாமல் எஸ்.ஏ.பி.யின், "காதலெனும் தீவினிலே" படித்த தினங்கள் ஞாபகம் வருகின்றன. அதன் பின் எத்தனையோ சிருஷ்டிகள். பின்னால், குமுதம் லட்சக் கணக்கில் விற்பனையாக வேண்டும்; அதன் மூலம் விலையைக் கட்டாமலிருக்கலாம்; விளம்பர விகிதங்களை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் செயல்பட்டு ஒரு ஃபார்முலா வகுத்தார் எஸ்.ஏ.பி. "குமுதம் ஃபார்முலா" பற்றி வாதப்பிரதிவாதங்கள் இருக்கக்கூடும். ஆனால் அது வெற்றி பெற்று விட்டது. ஒரு காலகட்டத்தில் ஆறு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி, இந்தியாவிலேயே மிக அதிகமாகச் செலாவணியாகும் பத்திரிகை என்று சாதனை படைத்தது.
இவ்வாறு திட்டமிட்டுச் செயலாற்றிய எஸ்.ஏ.பி.யின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், அவர் தமக்குக் கீழ் பணியாற்ற, தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழுச் சுதந்திரம் தந்ததாகும். நிர்வாகப் பொறுப்பைப் பார்த்தசாரதி ஏற்றார் எனில் இதழ்களின் தயாரிப்பை மாறி மாறி ஜ.ரா.சு., ரா.கி.ர, புனிதன் போன்றோரிடம் விட்டார். ஊக்குவிப்பார்; தலையிடுவது போல் தோன்றாத வகையில் திருத்தி அமைப்பார்.
சாண்டில்யனைப் பிடித்துப் போட்டது எஸ்.ஏ.பி யின் ராஜதந்திரங்களில் ஒன்று. ஹேமா ஆனந்த தீர்த்தன், பால்யூ போன்ற பல எழுத்தாளர்கள் ''குமுதம் எழுத்தாளர்கள்'' என்றே போற்றப்பட்டனர்.
பத்திரிகை உலகில் மாபெரும் வெற்றி கண்ட எஸ்.ஏ.பி., அடக்கமே உருவானவர். அவர் அதிர்ந்துபேசி யாரும் அறிந்ததில்லை. உறுதியாக இருக்கவேண்டிய தருணங்களில் அப்படி இல்லாமல் இருந்ததும் இல்லை. தகுதி அறிந்து தரும் அவரது கொடை உள்ளத்தை வலக்கரம் தவிர சில அணுக்கத் தோழர்கள் மட்டுமே அறிவர்.
மிகச் சிறந்த சொற்பொழிவாளராயினும் மேடை ஏறுவதில்லை என்பதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தார். விதி விலக்காகச் சில உண்டு. "கல்கி" அமரர் ஆனபோது இரங்கல் கூட்டத்தில் "பொன்னியின் செல்வன்" என்று ஆரம்பித்து, அவரது நூல்களின் தலைப்புக்களாலேயே அவரை மேன்மேலும் வர்ணித்து, இறுதியில், 'அமரதாராவாக என்றும் விளங்குவார்' என்று முடித்த போது எழுந்த கரவொலி இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது. அவர் உளமாறப் பேசி மகிழ்வித்த மற்றொரு நிகழ்ச்சி, கல்கி பத்திரிகையின் வெள்ளி விழா.
பக்திமான். வெள்ளிதோறும் திருக்குறள் பாராயணம், பூஜை, பஜனை எல்லாம் உண்டு. யோகாசனம் பழகி இறுதி வரை உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருந்தார்.
- கி. ராஜேந்திரன்
Release date
Ebook: 30 September 2020
English
India