Step into an infinite world of stories
திடீரென்று ஒரு நாள் வேறு ஏதோ வேலையாக இருந்தபோது ‘இது சத்தியம்’ என்று ஒரு தலைப்புத் தோன்றியது. ஒரு காகிதத்தில் அதை எழுதி எடிட்டரிடம் காட்டினேன். ‘நன்றாக இருக்கிறது.’ தொடர் கதை எழுதுங்கள் இந்த தலைப்பில், என்று கூறினார். பல கட்டங்களில் அவருடைய யோசனைகளைக் கேட்டே இதைப் படைத்தேன்.
என் இளம் பிராயத்தில் கும்பகோணம் பெரிய பெருமாள் சன்னதித் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு என் தந்தை என்னை அழைத்துச் சென்றிருந்தார். அந்த வீட்டுத் தலைவி கம்பீரமான நெடிய தோற்றத்துடன் மிடுக்கும் அதிகார தோரணையுமாக இருந்தார். அவர்கள் வீட்டில் கூண்டில் ஒரு பச்சைக் கிளி வளர்த்து வந்தார்கள்.
என்னவோ தெரியவில்லை, அந்தப் பெண்மணி என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டார். அவரை வைத்துத்தான் ராஜலஷ்மி அம்மாள் பாத்திரத்தைக் கற்பனை செய்தேன்.
தொடர்கதையாக இது பாதி வந்து கொண்டிருந்த போது 20, 30 அத்தியாயம்தான் வந்திருக்கும். ஒரு நாள் பட அதிபர் ஜி. என். வேலு மணி எங்கள் அலுவலகத்திற்கு வந்து எடிட்டரையும் என்னையும் பார்த்து, இதைப் படமாக்க விரும்புவதாகக் கூறினார். ‘கதை இன்னும் முடியவில்லையே?’ என்று நான் சொன்னதற்கு, ‘எப்படி முடிந்தாலும் பரவாயில்லை, ராஜலஷ்மி அம்மாள் பாத்திரம் நன்றாயிருக்கிறது. அது போதும்’ என்றார். எடிட்டரும் சம்மதித்து அனுமதி கொடுத்தார். சில நாள் கழித்து கதையின் மீதிப் பகுதியைச் சுருக்கமாக எழுதி திரு. வேலுமணியிடம் தந்தேன்.
‘இது சத்தியம்’ படம் வெற்றி பெறவில்லை. ஆனால் ராஜலஷ்மி அம்மாவாக நடித்த கண்ணாம்மா அந்தப் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று எல்லோரும் பாராட்டினார்கள்.
என் பால்ய நண்பனான கே. எம். குருசாமி என்ற குரு சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு லாரி கம்பெனி நடத்தி வந்தான். லாரி, போக்குவரத்து சம்பந்தமான பல தகவல்களையும், சென்னை ஊட்டி சாலை பற்றிய விவரங்களையும் அவன் மூலமாக தெரிந்து கொண்டேன். அந்த அன்பு நண்பனின் இனிய நினைவிற்கு இப்புத்தகத்தைக் காணிக்கையாக்கி, என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ரா.கி. ரங்கராஜன்
Release date
Ebook: 23 December 2019
English
India