Step into an infinite world of stories
என்.டி. ராமராவை போலத்தான் கிருஷ்ணன் இருப்பார்! கே.ஆர். விஜயாவை போல்தான் அம்மன் இருப்பாள்! சிவாஜி கணேசனை போல்தான் கட்டபொம்மன் இருப்பான் - என்று தாங்களாகவே இவர்களை உருவகப்படுத்திக் கொண்டு, உண்மையான இறை சொரூபம் தங்கள் முன் தோன்றினாலும், அவை தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொண்ட ரூபங்களுக்கு அப்பாற்பட்டு இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அம்மன் கே.ஆர். விஜயா போன்று இல்லை என்று நாம் சொன்னால், எதை ஆதாரமாக வைத்து இப்படிக் கூறுகிறீர்கள் என்று நம்மைக் கேட்டால், நாம் என்ன பதில் கூறமுடியும்!
பொன்னியின் செல்வன் படித்து சோழர்குல செம்மல்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று உருவகப்படுத்திக் கொண்டு விட்டவர்கள் பலர்! பத்மினியை குந்தவையாகவும், வைஜெயந்தி மாலாவை நந்தினியாகவும் இருத்தியிருக்கிறேன் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்! வக்கீல் என்றால் வரதாச்சாரி, க்ளப் டான்சர் என்றால் ரீட்டா, அடியாள் என்றால் ஜம்பு என்று தமிழ் திரையுலகம் நமக்கு போதித்து விட்டது! வரதாச்சாரி என்று அடியாள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! ஜம்பு, முனியன் என்று வக்கீல்கள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! இப்படிப்பட்ட வாசகர்களுக்காக சங்கதாரா எழுதப்படவில்லை.
சோழர் சரித்திரத்தில் துண்டு துண்டாக மர்மங்கள். சம்பவங்களுக்கு காரணகர்த்தா யார் என்று கூற இயலாதபடி அடுக்கடுக்காக பல நிகழ்வுகள்! இவற்றைக் கையாள பல எழுத்தாளர்கள் முன்வரவில்லை என்றே கருதுகிறேன். விஞ்ஞானம் உலகையே ஆளும் இன்று, MH-370 என்கிற மலேசிய விமானம் காணாமல் போய் விட்டது! விபத்து என்று கூற இயலாதபடி அதன் நொறுங்கிய உதிரி பாகங்களும் கிடைக்கவில்லை. விஞ்ஞானமும், பகுத்தறிவும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள இதே காலகட்டத்தில்தான், அமானுஷ்யமும், மர்மமும் வெற்றிகரமாக இன்னொரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.
மீண்டும் கூறுகிறேன்! சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலின், பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) ஆதித்த கரிகாலனின் கொலைதான்! பல எழுத்தாளர்களும், சரித்திரப் பேராசிரியர்களும் நுழைய மறுத்த இந்தப் பகுதிக்கு ‘சங்கதாரா’ என்னும் தோணியில் சென்றுவிட்டு, பத்திரமாக திரும்பி வந்திருக்கிறேன்.
விரைவில் இன்னும் பல சோழ மர்மங்களை விடுவிக்க எண்ணும்
அன்பன்,
‘காலச்சக்கரம்’ நரசிம்மா.
Release date
Ebook: 3 August 2020
English
India