Step into an infinite world of stories
சிறப்புரை
திரு. கே.ஆர்.ஸ்ரீனிவாச ராகவன்
(கல்கி - தீபம் - பொறுப்பாசிரியர்)
பூக்கள் பேசுமா? பேசும். அவற்றோடு பேசுவது இறைவனாயிருக்கும்போது! ஆனால், ஷ்யாமா அநாயாசமாக அவற்றோடு பேசியிருக்கிறார். தங்க மழையாய் சொரியும் சரக்கொன்றையைப் பார்க்கும் போது பூரிப்பதாகட்டும்; தும்பை வட்டம் அமைத்த தாகட்டும்; பகவதிக்குப் பூவாடை செய்ததாகட்டும், ஒவ்வொன்றிலும் தாம் கரைந்த தன்மையை அவர் வெளிப்படச் செய்கிறார்.
குழந்தைப் பூக்களான பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுவது குறித்து - நேரில் கள ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர்; தம் தாத்தா பாட்டி பெயரில் டிரஸ்ட் அமைத்து, ஹோசூரில் அறுபதுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி வசதியோடு, வீடுகளையும் கட்டித் தந்திருப்பவர் ஷ்யாமா. இங்கே, பூக்குழந்தைகள் குறித்து பரவசமூட்டும் பதிவுகளை செய்திருக்கிறார்.
பூக்கள் என்பதென்ன? வாசனை திரவியங்களுக்கான மூலப் பொருளா? இல்லை. பூக்கின்ற மலர் யாவும் இறைவனுக்கே என்கிறார் ஷ்யாமா. ஆனால், தொண்டரடிப் பொடியாழ்வார், 'பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி' என்று, மலர்களிலும் பகவானைக் கண்டு ஆனந்தித்தார். ஆம்; இறைவனின் ஆனந்தச் சிதறலாகவே பரிமளிக்கின்றன பூக்கள். அவற்றைப் பார்ப்பதே பேரானந்தம்தான். அவற்றில்தான் எத்தனையெத்தனை வடிவங்கள்? எவ்வளவு அழகான வண்ணச் சேர்க்கைள்? எத்தனை விதமான வாசனைகள்? அவை மலர்கின்ற பொழுதுகளிலும், காலங்களிலும் தான் எத்தனை வேறுபாடு?
புல், செடி, கொடி, மரம், புதர், குளம்... என்று அவை தோன்றுகின்ற இடங்கள் பற்பல. ஆனால், பூ என்கிற ஒற்றை எழுத்துக்குள் அவையனைத்தும் இடங்கொண்டு விடுகின்றன. தம்மைக் கட்டுகின்ற நாருக்கோ, நூலுக்கோ இசைந்து கொடுத்து அழகான மாலையாகின்றன.
“அனைவரின் பார்வைக்கும் இனியவராய் இருங்கள்; நேசிக்கத்தக்கவராய் இருங்கள்; சந்தோஷம் தருபவராய் இருங்கள்; அணுக எளியவராய் இருங்கள்; இணக்கமானவராக இருங்கள். அப்படியானால், நீங்களே மாலைதான்” என்று நமக்கு உபதேசிக்கின்றன பூக்கள்.
பூக்கள் என்றதும் பெண்களின் கூந்தலிலும், இறைவனின் திருமேனியிலும் இடம்பெறுபவை என்றுதான் தோன்றும். ஆனால், இலக்கியம், வரலாறு, அறிவியல், மருத்துவம் மற்றும் வழிபாடு என, அனைத்துக் கோணங்களிலும் தங்களின் பயன்பாடு பற்றி இவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கின்றன பூக்கள். அதை அழகாக, அருமையாக, பதியனிட்டிருக்கிறார் ஷ்யாமா.
பொதுவாக, பூச்செடிகளை ஊன்றி நீரூற்றி வளர்த்து நந்தவனம் அமைப்பார்கள். ஆனால், பூக்களே அமைத்துக் கொண்டுள்ள நந்தவனத்தை இங்கே காண்கிறோம். பூக்களின் நறுமணம் நம்மை மயக்க வல்லது. அதைப் போன்றே, இந்தத் தொடர் வாசகர்களின் மனத்தையும் ஈர்த்தது; லயிக்கச் செய்தது என்பதில் மிகையில்லை. இதை வாசிக்கும்போது, அந்த அனுபவம் உங்களுக்குள்ளும் ஏற்படும் என்பது நிச்சயம்.
Release date
Ebook: 18 December 2019
English
India