Step into an infinite world of stories
"அன்னைக்கு… அன்னைக்கு 'இனிமேல் என் முகத்தில் விழிக்காதே!' என்று மதி சொல்லிட்டார், தாத்தா!" என்றபோது, அன்றைய நினைவில் சம்யுவுக்கு கண்ணீர் துளிர்த்தது.
திகைப்புடன் நோக்கிய அன்பழகன் எதுவும் கேட்கும் முன்னர், "அப்படி இருக்கும்போது, அவருக்கு அந்த நினைவுகள் இல்லாத நிலையில், அதை மறைத்து கல்யாணம் செய்யறது சரியா, தாத்தா?"
குழம்பிய நிலையில் தன்னைக் கேள்வி கேட்ட சம்யுவைக் கண்டு, அன்பழகனுக்கு பாவமாக இருந்தது.
"சரிம்மா! அவன் உன்கிட்ட 'என் முகத்தில் விழிக்காதே!' என்று சொல்லிட்டான். ஆனால், அவனுக்கு ஆபத்து என்றதும், நீ ஏன் ஓடி வந்தாய்?"
‘என்ன கேள்வி இது?’ என்பது போல, சம்யு பெரியவரை நோக்கினாள்.
"சரி! நான் ஒன்னு கேட்கிறேன்!" என்றவர், சம்யுவின் முகம் மாறியதைக் கண்டு,
"இல்லைம்மா! அன்றைக்கு என்ன நடந்தது என்று நான் கேட்கப் போவதில்லை! அது உங்க ரெண்டு பேருக்குமான விஷயம்! சண்டையில் யார் பக்கம் தப்பு என்றுதான் நான் கேட்க நினைத்தேன்!" என்று விளக்கினார்.
"ரெண்டு பேர் மேலயும் தப்பில்லை, தாத்தா! அது முழுக்க முழுக்க ஒரு மிஸ்- அண்டர்ஸ்டேண்டிங்! அவ்வளவுதான்!" என்று சம்யுக்தா வேகமாகச் சொன்னதும், மதியை விட்டுக் கொடுக்காமல் அவள் பேசியது, அன்பழகனுக்கு முறுவலை வரவழைத்தது.
"சரிம்மா! அவன் அப்படி சொன்னதற்கு நீயும் கோபித்துக் கொண்டு வந்து விட்டாய்! இந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால், உன்னால் அப்படியே இருந்திருக்க முடியுமா? "
அன்பழகனின் கேள்விக்கு பதில் சம்யுவுக்குத் தெரிந்தே இருந்தது.
என்னதான் அவன் பேசியதில் கோபமும் வருத்தமும் இருந்தாலும், வீட்டுக்கு வந்து அமைதியாக யோசித்த பின், அவளுக்கு கோபம் குறையத்தானே செய்தது?
"அதெப்படி தாத்தா, அப்படி விட முடியும்? கொஞ்ச நாள் கோபித்துக் கொண்டு இருந்தாலும், அவரே உண்மை புரிந்து வந்திருப்பார்! அவர் வராமல் இருந்திருந்தால், நானே அவரைத் தேடித் போய் என் நிலையை விளக்கி இருப்பேன்!"
உறுதியுடன் சொன்னவளைப் பெருமையோடு நோக்கினார் பெரியவர்.
"எப்படியும் நீங்க ரெண்டு பேரும் சமாதானம் ஆகி இருப்பீங்க என்று நம்புகிறாய்தானே? என்றவரிடம், சம்யு உறுதியுடன் தலையசைத்தாள்.
“அப்புறம் எதுக்கும்மா இப்போ குழம்புகிறாய்?" என்று வினவியர்,
"அவனுக்கு உன் நினைவு இல்லை என்பதால், தயங்குகிறாயாம்மா?" என்று பரிவுடன் விசாரித்தார்.
"அது... அது கஷ்டமாதான் இருக்கு தாத்தா! அவர் என்னை மறந்திருக்கலாம்! ஆனால், என் நேசம் இன்னும் அப்படியேதானே இருக்கு, தாத்தா?" என்றவள் குரல் தழுதழுத்தது.
Release date
Ebook: 10 April 2024
English
India