Step into an infinite world of stories
“பத்து மாசம் குழந்தையை சுமந்து பெத்துக்க போறது நான்... அதை எப்போ பெத்துக்கணும் என்று முடிவு செய்யற உரிமை எனக்கில்லையா?” மனைவியின் கேள்வியில் மனோகர் திகைத்து போனான்.
“இப்போ உரிமை பற்றிய பேச்சே இல்லை சுமித்ரா... நீ சொல்ற மாதிரியே உனக்கு அந்த உரிமை இருக்கு என்றாலும், ஒரு கணவனா உன் முடிவு பற்றி தெரிஞ்சுக்கறதுக்கு எனக்கும் உரிமை இருக்கு இல்லையா?” கோபத்தை அடக்கிக் கொண்டு கணவன் கேட்டதும், சுமித்ராவால் உடனே பதில் சொல்ல இயலவில்லை.
தன் ரகசியம் வெளி வந்ததில் அவளுமே கலங்கி போயிருந்தாள். “கல்யாணத்துக்கு அப்புறம் சில விஷயங்களில் கணவனோ மனைவியோ தனித்தனியா முடிவெடுக்க முடியாது. அதுவும் குழந்தை சம்மந்தப் பட்ட விஷயம் தனியா முடிவு எடுக்கிற விஷயம் கிடையவே கிடையாது.”
கணவனிடம் சொல்லி இருக்கலாம்! ஆனால்... அவன் ஏன் என்ற கேள்வி கேட்டால் அவளால் பதில் சொல்ல முடியுமா? அவளது காரணம் அவனுக்கு நியாயமாக தெரிய வாய்ப்பே இல்லையே! அதுவும் இல்லாமல்... அவள் யோசனையை அவனது அடுத்த கேள்வி தடுத்து நிறுத்தியது.
“நாம மூணாறு போயிருந்த போதும், நீ மாத்திரை எடுத்துக்கிட்டயா?” சட்டென்று கணவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் தெரிந்த குற்ற உணர்வு, மனோகருக்கு பதிலைச் சொல்லி விட, மனைவியைப் பற்றி இருந்த கை தானாக தளர, கண்களில் வலியுடன் அவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.
Release date
Ebook: 10 April 2024
English
India