Step into an infinite world of stories
காலம் வேகமாக மாறிக்கொண்டே போகிறது. புதிய கதைகள், புதிய புதிய காவியங்கள், புதிய புதிய உண்மைகள், யுகத்துக்கு யுகம், தலைமுறைக்குத் தலைமுறை ஆண்டுக்கு ஆண்டு தோன்றிக் கொண்டே இருக்கின்றன. கதைகளும் அவை அமைக்கப்பட்ட காலச் சூழ்நிலையும், சம்பவங்களும் நாளடைவில் வலுக்குறைந்து நம்பிக்கைக்கு அளவுகோலான நிகழ்கால வரம்புக்கு நலிந்து போகலாம். கதையும் கற்பனையும்தான் இப்படி அழியும். அழிய முடியும். அழிக்க முடியும்.
ஆனால் சத்தியத்துக்கு என்றும் அழிவில்லை! தர்மத்துக்கு என்றும் அழிவில்லை! கதையும் கற்பனையும் சரீரத்தையும் பிரகிருதியையும் போல வெறும் உடல்தான். சத்தியமும் தர்மமும் ஆன்மாவையும், மூலப்பிரகிருதியையும் போல நித்தியமானவை. காலத்தை வென்று கொண்டே வாழக் கூடியவை. இதை மறுப்பவர் எவருமில்லை. எங்கும் இல்லை என்றும் இல்லை.
மகாபாரதக் கதையைத் தமிழில் ஐந்து பெரும் கவிகள் பாடியுள்ளனர். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காக, அசுர சக்திகளோடு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் போராடும் ஐந்து சகோதரர்களை இந்த மகாகாவியத்தில் சந்திக்கிறோம். தமிழில் இந்தக் காவியத்தைப் பாடியவரும் ஐவர்; காவியத்துள் பாடப்பட்டவரும் ஐவர். எனவே, இரு வகையாலும் ‘ஐவர் காவியம்’ என்ற பெயருக்கு மிகமிக ஏற்றதாக விளங்குகிறது மகாபாரதம்.
நெருப்பைத் தொட்டவர்களுக்குத்தான் அது சுடுகிறது. நெருப்புக்குச் சுடுவதில்லை. தருமமும் இப்படி ஒரு நெருப்புத்தான். அறியாமையினாலோ, அல்லது அறிந்து கொண்டே செருக்கின் காரணமாகவோ, தருமத்தை அழிக்க எண்ணி மிதிக்கிறவர்கள் அந்தத் தருமத்தாலேயே சுடப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். தண்ணீரில் உப்பு விழுந்தால் தண்ணீரா கரைகிறது? உப்புத்தானே சுரைகிறது. நன்மையைத் தீமை நெருக்கினால் நன்மை அழிவதில்லை. தீமைதான் அழிகிறது.
துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்ற தீயவர்களையும் இந்தக் கதையில் காண்கிறோம். விதுரன், வீட்டுமன், தருமன், விகர்ணன், அர்ச்சுனன் போன்ற நல்லவர்களையும் காண்கிறோம். கர்ணனையும், வீமனையும் போலப் பலசாலிகளைக் காண்கிறோம். குந்தியையும், காந்தாரியையும் போலத் தாய்மார்களையும், திருதராட்டிரன், பாண்டு போன்ற தகப்பன்மார்களையும் காண்கிறோம். திரெளபதி, சுபத்திரை, சித்திராங்கதை போன்ற பெண் திலகங்களையும் இந்த மகாகாவியத்தில் தான் சந்திக்கிறோம். எல்லாம் தெரிந்து எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக விளங்கிக்கொண்டே ஒன்றுமறியாத பாமரன் போல் சிரித்துக் கொண்டிருக்கும் பரமாத்மாவான கண்ணன் இதயத்திலிருந்து மறைவானா? அழகு மிளிரும் வாலிபப் பருவத்திலேயே போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த அபிமன்யுவுக்காக நாம் கண்ணீர் சிந்தாமல் இருப்போமா? எல்லா இன்னல்களுக்கும் அப்பால் குருஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த யுத்தத்திற்குப்பின் பாண்டவர்கள் மூலமாக உண்மையும், அறமும் வெற்றி பெற்றனவே. அதற்காக தம்முடைய இதயம் விம்மிப் பூரிக்காமல் இருக்குமா?
Release date
Ebook: 15 September 2020
Tags
English
India