Step into an infinite world of stories
4
Short stories
அப்புசாமி சீதாப்பாட்டி கதாபாத்திரங்களுக்கு இன்றைய தேதியில் 42 வருடம் ஆகிறது. அந்த இரு பாத்திரங்களும், அவர்களது பட்டாளமும் என் கட்டுப்பாட்டுடனோ, கட்டுப்பாடு இல்லாமலோ தமிழகத்தில் கொட்டமடித்து வருகிறார்கள். தமிழ் கூறும் நல்லுலகம் கோமாளி அப்புசாமியை மன்னித்து, விரும்பி, ரசித்து ஆதரித்து வருகிறார்கள். அது ஒரு திங்கட்கிழமை. நான் வெறுங்கையையும் மண்டை நிறைய பயத்துடனும் காரியாலயம் சென்றேன். ‘உங்க கதை?' என்றார். "நேற்று வீட்டிலே கொஞ்சம் கசாமுசா?” என்று பயத்துடன் முணுமுணுத்தேன். “சண்டையா?” என்றார் குறுஞ்சிரிப்புடன். அவர் சிரித்ததும் தைரியம் வந்து கொஞ்சம் வெலாவாரியாக ஞாயிறன்று வீட்டில் நடந்த சின்ன சம்பவத்தை விவரித்தேன். என் மனைவியும் நானும் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். ‘நீ போயிண்டே இரு. நான் இதோ வர்றேன்' என்று மனைவியை முன்னதாக அனுப்பிவிட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு வெள்ளாளத் தெரு பஸ் ஸ்டாப் போய்ப் பார்த்தால் அங்கே மனைவியைக் காணோம்! பதறிப் போய்விட்டேன். மனசில் பயங்கரமான கற்பனை. கதை எழுதறதுக்குக் கற்பனை வருதோ இல்லையோ? இது மாதிரி விஷயங்களில் கற்பனை பறக்கும். நாலு நாள் முன் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. ‘பஸ் ஸ்டாப்பில் நகைகள் அணிந்து நின்ற பெண்ணைக் குண்டர்கள் கடத்தல்!' பரபரத்துவிட்டேன். ஆளானப்பட்ட வீரரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே மனைவியைக் காணோமென்று பதறினாரென்றால் நான் ஒரு சாதா மானிடன். பயப்படாமலிருக்க முடியுமா? நல்ல வேளை அப்போ என் மருமான் வந்து கொண்டிருந்தான். "டேய் மணி! மாமியைப் பார்த்தியாடா?” என்று ரோடிலேயே ஒரு கத்தல் போட்டேன். “மாமியா? பஸ் 23Cல் ஏறி இப்பத்தானே போகிறா.நான்தான் ஏற்றி விட்டுட்டு காய் வாங்கி வர்றேன்” என்றான். வயிற்றில் ஒரே சமயம் பாலும் வெந்நீரும் வார்த்தான். மனைவி மேல் மகா கோபம். ‘எனக்காக வெயிட் பண்ணாமல் எப்படிப் போகப் போச்சு?' நான் உடனே ஆட்டோ பிடித்து மாமனார் வீட்டுக்குப் போய், அவளுடன் ஒரு சண்டை. “கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? நான் வரதுக்குள் புறப்படணுமா?” அது இது என்று சண்டை போட்டேன். 'நீங்க சொன்னீங்களா? பஸ் ஸ்டாப்பிலேயே காத்திருக்கச் சொல்லி, 23C வர்றது எவ்வளவு அபூர்வம்னு உங்களுக்கே தெரியும். பஸ் வந்தது. மருமான் ஏற்றிவிட்டான். நீங்க அடுத்த பஸ்ஸிலே வருவீங்கன்னு போய்விட்டேன். அதுக்கு ஏன் கோபம்?” என்றாள். "ராத்திரி பெரிய வாக்குவாதம். அந்த மனத் தாங்கலினால் கதை எழுதவில்லை, ஸாரி சார்,” என்றேன். “அதனாலென்ன? நாளைக்கு எழுதிண்டு வந்திடுங்க” என்ற ஆசிரியர், "உங்க மாமனாருக்குக் கூடக் கோபம் வருமா? மாமியார் கூடவெல்லாம் சண்டை போடுவாரா?” என்றார். “கோபம் எனக்குத்தான் சார் வந்தது. நான்தான் மனைவிகிட்டே சண்டை போட்டுட்டேன்” என்றேன். ஆசிரியர் சிரித்தார். “அதெல்லாம் புரிந்தது. நீங்க நாளைக்கு எழுதப்போற கதையிலே மாமனார்தான், மாமியார்கிட்டே சண்டை போடறார். வயசான தம்பதிகளுக்குள்ளே என்னவோ சண்டை. அந்த மாதிரி எழுதுங்கள்” என்றார். மறுநாள் கதை தந்துவிட வேண்டுமென்று ராத்திரி கொஞ்சமும் விடியற்காலை கொஞ்சமுமாக ஒரு தாத்தா பாட்டி தம்பதிகளுக்குள்ளே சண்டை வருவதாக ஒரு கதை எழுதிவிட்டேன். என் பக்கத்து வீட்டில் அப்பு சாஸ்திரிகள் என்று ஒரு மாமா இருந்தார். தினமும் வைதீகமெல்லாம் முடித்துவிட்டு ஒரு நாளைப் போல இரவு பதினொரு மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டுவார் (அவர் வீட்டுக் கதவைத்தான்). அவர் மீது மனசுக்குள் மகா எரிச்சல். என் கதாநாயகத் தாத்தாவுக்கு அப்பு தாத்தா என்று பெயர் வைத்துவிட்டேன். பாட்டிக்குச் சீதாலட்சுமி என்று வைத்தேன். ஆசிரியர் மறுநாள் கதையைப் படித்து பாராட்டியவர், “அப்பு என்பது மொட்டையாக இருக்கு. இன்னும் ஏதாவது அத்தோடு சேருங்களேன்,” என்றார். நான் ஒரு சாமி சேர்த்து, ‘அப்புசாமி' என்றேன். 'ஓகே' செய்தார். மனைவி பெயர் அவ்வளவு நீளம் வேண்டாம். ‘சீதா' என்றாலே போதுமே” என்றார். “சீதா நாகரிகமான பாட்டியாக இருக்க வேண்டும். இரண்டு பேருமே கர்நாடகமாக இருக்கக் கூடாது” என்றார். "அப்புசாமியை மூக்குப் பொடி பிரியராக எழுதியிருக்கிறீர்கள். சீதாவுக்கு அவரது அந்தப் பழக்கமெல்லாம் வெறுப்பு ஊட்டவேண்டும். சீதாவை மாடர்னாகச் செய்து விடுங்கள். அப்போது தான் மோதலுக்கு நன்றாயிருக்கும்" என்றார். நான் அப்போதெல்லாம் ரீடர்ஸ் டைஜஸ்ட் விரும்பிப் படிப்பேன். “பாட்டி ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பவராக இருக்கலாமா?” என்றேன். "தாராளமாக ரொம்ப ஜோராயிருக்கும்” என்று சிரித்தார். இப்படியாக குமுதம் ஆசிரியர் தந்த ஆதரவாலும் அவர் வழிகாட்டி வந்ததாலும் அப்புசாமியும் சீதாப்பாட்டியும் உருவாகி இன்னமும் என்னிடமும் வாசகர்களிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். - பாக்கியம் ராமசாமி
Release date
Ebook: 3 January 2020
English
India