Step into an infinite world of stories
Fantasy & SciFi
ஒரு ரத்ததான முகாமில்தான் பாஸ்கரை சந்திக்கும் வாய்ப்பு ரம்யாவுக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட ஒருவகை ரத்தம் கிடைக்கவில்லை என்றதும் அந்த நோயாளியைப் பிழைக்க வைக்க, எப்படியாவது ரத்தம் சேகரித்துக் கொண்டு வர வேண்டும் என ரம்யா பாடுபட, அவளுக்கு பக்கபலமாக பாஸ்கர் நின்று, இருவரும் செயல்பட, எப்படியோ ஆட்களைப் பிடித்து ரத்தம் சேகரித்து விட்டார்கள். அந்தப் பெண் உயிர் பிழைத்து விட்டாள். அந்தக் குடும்பமே டாக்டருக்கு நன்றி சொல்ல, ‘இவங்க ரெண்டு பேருக்கும்தான் உங்க நன்றிகள் உரித்தாகணும்’ என டாக்டர் கைகாட்ட, அவர்கள் ரம்யா, பாஸ்கரின் காலில் விழுந்து விட்டார்கள். ஒரு உணர்ச்சிபூர்வமான சூழ்நிலையில் ஒரு உயிரைக் காப்பாற்றிய நெருக்கடியில் அந்த நட்பு ஆரம்பமானது. இருவரும் டோனர்கள் - மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரத்தம் தரும் இயல்பு கொண்டவர்கள் - அடிக்கடி ரத்ததான முகாம்களை நடத்துபவர்கள் என பல ஒற்றுமைகள் இருப்பதால், சந்திப்புகள் வளர்ந்து, நட்பு இறுக்கமானது. குடும்பம் பற்றிப் பேசினார்கள். சொந்த சங்கதிகளை பரிமாறிக் கொண்டார்கள். பார்க்காவிட்டால் முடியாது என்ற நிலை உருவானது. தினசரி தொலைபேசி மூலம் பேசுவது வழக்கமாயிற்று. ஒருநாள் தாள முடியாமல் கோயிலில் வைத்து பாஸ்கர் தன் மனதை உடைத்து விட்டான். “ரம்யா! உன்னை நான் காதலிக்கறேன்னு தோணுது.” ரம்யா அதிர்ச்சியடையவில்லை.என்ன ரம்யா பேசலை?” “பேசத் தெரியலை பாஸ்கர். இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை.” “ரம்யா! நீ எங்கிட்ட கோவப்பட்டாலும் சரி! என் மனசுல உள்ள உணர்ச்சிகளை நான் கொட்டித் தீர்த்துர்றேன். கேட்டுக்கோ!” “சொல்லுங்க பாஸ்கர்!” “கல்யாணியை ஒருநாள் பாக்கலைனா கஷ்டம் தெரியலை. உன்னைப் பாக்கலைனா முடியலை. எப்பவும் உன் ஞாபகமா இருக்கு. உன்னை நினைச்சாலே ஒடம்புல ஒரு புது கெமிஸ்ட்ரி உண்டாகுது. ரம்யா! ஒரு அழகான பெண்கிட்ட உண்டாகக் கூடிய பாலுணர்வு இது இல்லை. அந்த மாதிரி அல்பத்தனங்களைக் கடந்தவன் நான். அதுக்கும் மேல உங்கிட்ட என்னவோ இருக்கு. எனக்குப் புரியலை. ஐ யாம் ஸாரி ரம்யா!” அவள் பேசவில்லை. “நீ யோசி ரம்யா! இது தப்புனா, உடனே என்னைக் கண்டிச்சிடு. அந்த உரிமை உனக்கு உண்டு.” “நான் போறேன் பாஸ்கர்!” வீட்டுக்கு வந்து விட்டாள். அன்று இரவு சுத்தமாக உறக்கமே வரவில்லை. அவனது வார்த்தைகள் கழன்றன. அதில் ஒன்று கூடத் தப்பாகத் தெரியவில்லை. ரம்யா கல்லூரியில் படிக்கும் நாளில் அவளிடம் ஜொள் விட்ட கூட்டம் ஏராளம். காதல் கடிதம் தந்து, கலாட்டா செய்து, கெஞ்சி அழுது, ரகவாரியாக அவள் பார்க்காத ஆண்கள் இல்லை. சகலமும் அவளுக்கு வேடிக்கை. அப்போதே மறந்து போவாள். ஆனால், பாஸ்கர் விவகாரத்தில் இதை உதற முடியவில்லை.
© 2024 Pocket Books (Ebook): 6610000508464
Release date
Ebook: 13 January 2024
English
India