Step into an infinite world of stories
‘எடுத்த காரியம் யாவினும் கை கொடுத்து' என்னுடைய பணிகளில் பங்கு பெற்றுவரும் எழுத்தாளர், எஸ். லட்சுமிசுப்பிரமணியம் - எஸ்.எல்.எஸ்.
அவரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்து விட்டால் அப்புறம் அதைப் பற்றி மறந்து விடலாம். அந்தப் பணியை அளவாக அழகாக முடிப்பதுடன், குறித்த நேரம் தவறாமலும் கொண்டுவந்து கொடுத்து விடுவார். சிறப்பாக எழுதக்கூடிய பல எழுத்தாளர்களை நான் அறிவேன். ஆனால், 'டைம் டேபிள்' போட்டுக் கொண்டு அதைப் போல எழுதக்கூடிய எழுத்தாளர், எனக்குத் தெரிந்தவரை எஸ்.எல்.எஸ். மட்டும்தான்.
துணுக்குகள் முதல், சிக்கலான மருத்துவக் கட்டுரை வரை, குட்டிக் கதை முதல் - தொடர் நாவல் வரை, அவருடைய எழுத்து, அவை ஒவ்வொன்றிலும் பரிமளிக்கும். அது எங்கே இருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். அப்படி ஒரு அலாதியான 'ஸ்டைல்' அவருக்கு உண்டு.
'ஆனந்தவிகடன்' மாவட்ட மலர் பணிகளில் நான் ஈடுபட்டபோது தாமரைமணாளனும், மாயாவும் எனக்குத் துணையாக வந்து செய்திகளைத் தொகுத்தார்கள். எங்களுக்கு இணையாக இன்னொரு காரில் போட்டி போட்டுக் கொண்டு விஷயங்களைத் தொகுத்தார் எஸ்.எல்.எஸ். 'இதயம் பேசுகிறது' பத்திரிகையை ஆரம்பித்தபோது, அதன் பலத்துக்கு அடிப்படையாக அமைந்ததும் இந்த 'டீம்' தான்.
கோலம் போடுவது போல அழகான நடையுடன், உணர்ச்சிகளைக் கவிதை போல வடித்து, மெல்லிய நுட்பமான மனச்சாயல்களைக் காட்டுவது அவருடைய தனிச்சிறப்பு. அவருடைய கதைகளை 'எடிட்' செய்வது ரொம்ப சிரமம். அப்படித் தொடர்ச்சியாக அழகான சங்கிலியாகக் கோத்திருப்பார்.
இன்று கர்நாடக சங்கீதம் தமிழ்நாட்டில் ஒரு சீசனுக்கு மவுசு பெறுகிற விஷயமாக இருக்கிறது. அதைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, சுவையான இரண்டு நாவல்களைச் சுவை குன்றாமல் எழுதி இருக்கிறார் எஸ்.எல்.எஸ். சம்பிரதாயமான குடும்பம், சகஜமான சூழ்நிலை, பழக்கமான பின்னணி இவற்றை வைத்துக் கொண்டே வித்தியாசமான கதையை உருவாக்கிவிட அவரால் முடியும்.
'இதயம் பேசுகிறது' சிறப்பு மலருக்காக நாங்கள் எல்லாரும் காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சியை சொல்லிக் கொண்டுவந்தார் அவர். சொல்லி முடிக்கும் போதுதான் அது அவருக்குத் தெரிந்த ஓர் உண்மை நிகழ்ச்சி என்பது தெரிந்தது. “கதையைவிட சுவாரசியமாக இருக்கிறதே? இதையே ஒரு நாவலாக எழுதுங்களேன்!” என்று நான் அவரிடம் சொன்னேன்.
அதுவே நீங்கள் இப்போது படிக்கவிருக்கும் நாவல்...
- மணியன்
Release date
Ebook: 5 February 2020
English
India