Step into an infinite world of stories
'தாயார் சன்னதி' இரண்டாம் பதிப்பு வெளிவந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத எனக்கு, மூன்றாம் பதிப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என்னும் செய்தி, இடிபோல அதிர வைத்தது. இந்த மூன்றாம்பதிப்பில் புதிதாகக் கோட்டோவியங்களோ, புகைப்படங்களோ சேர்க்கப்படவில்லை. ஆனால் புதிதாக ஓர் அணிந்துரை இடம் பெற்றிருக்கிறது. எழுதியவர், எனக்கு மிகவும் பிடித்த 'பேயோன்'. அவர் யாரென்றே எனக்கு(ம்) தெரியாது. ஆனால் அவர் எனக்கு நண்பர். என்னை அவருக்குப் பிடித்திருக்கிற செய்தி தெரிய வந்தபோது, 'சிக்கினாருடா மனுஷன்' என்று அணிந்துரை கேட்டேன். மிரட்டலுக்கு பயந்து உடனே எழுதி கொடுத்து விட்டார். அவருக்கு என் நன்றி.
‘தாயார்சன்னதி' படித்து விட்டு, இன்னும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் போன்றவைகளில் பெரும்பாலானவை திருநவேலி அல்லாத வேறூர் வாசக, வாசகிகளிடமிருந்து வரும்போதுதான், 'அட! இது நெசந்தான்' என்று நம்ப முடிகிறது. திருநவேலிக்காரர்களின் எதிர்வினையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எங்கும் கிடைக்காமல் என்னிடமே வந்து புஸ்தகம் கேட்டவர்களும் உண்டு. அப்படி கேட்டவர்களில் ஒருவர், திருநவேலி கிராஜுவேட் காஃபி பரமன் அவர்கள். வண்ணதாசன் அண்ணாச்சியின் நெருங்கிய நண்பர். இலக்கிய உபாசகர். திருநவேலிக்கு எந்த ஒரு இலக்கியவாதி சென்றாலும் பரமனின் கிராஜுவேட் காஃபிபார் முன்பு ஒரு ஸ்டூலைப் போட்டு அமர்ந்து, அவரிடம் பேசிக்கொண்டிருக்காமல் திரும்பி வந்ததில்லை. 'நான் மூங்கில் மூச்சப் படிச்சுட்டு பொலம்பிட்டு இருந்தென். வண்ணதாசந்தான் 'தாயார் சன்னதிய விட்டுராதெடேன்னாரு. எனக்கு ஒரு பொஸ்தகம் வேணுமெ.' இரண்டு மாதங்களுக்கு முன்பு தொலைபேசியில் சொன்னார். மூன்றாம் பதிப்பு தயாரானவுடன், அவருக்குக் கொடுக்க உத்தேசித்திருந்தேன். கிருஷ்ண ஜெயந்தியன்று திரு. பரமன், பரமபதம் அடைந்த செய்தி வந்தது. கனத்த மனதுடன் இப்போது அவருக்கு இந்த மூன்றாம் பதிப்பை சமர்ப்பிக்கிறேன்.
'தாயார்சன்னதி'யின் இரண்டாம் பாகம் (பதிப்பு அல்ல) விரைவில் வெளியாகக்கூடிய அபாயம் இருப்பதை ஓர் எச்சரிக்கையாக வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
சுகா
Release date
Ebook: 2 July 2020
English
India