Step into an infinite world of stories
Fiction
அசலான இலக்கியம் என்பது அறிவுரை கொடுப்பது இல்லை. அது மனிதனை - தன்னைத்தானே அறிந்து கொள்ளத் தூண்டுவதுதான். அவனுக்கு அவனே வழிகாட்டி. அவனே தனக்கு விளக்காகவும் ஒளியாகவும் இருக்கிறான். பணம் சம்பாரிக்கவில்லை, பெரிய வேலைக்குப் போகவில்லை என்பதால் அவன் சின்னவன் இல்லை. பெரிய வேலை பார்க்கிறவன் அறிவாளி இல்லை. ஞானமும் அறிவும் ஒன்று கிடையாது.
புத்திசாலித்தனத்தால் எழுதப்படுவது படைப்பே இல்லை. மூன்றாம் தரம் என்றுகூட அவற்றைச் சொல்லமுடியாது என்று படைப்பு எழுத்தாளர்கள், சகோதர எழுத்தாளர்கள் பலரைப் பற்றி அபிப்பிராயம் சொல்கிறார்கள். அது பொறாமையால் - இயலாமையால் சொல்லப்படுகிறது என்பது இல்லை. சொல்ல வேண்டியதை மற்றவர்கள் சொல்லப் பயப்படுவதை படைப்பு எழுத்தாளன் சொல்கிறான்.
தமிழில் ஒரு நாற்றாண்டு காலமாக சிறுகதைகள் உரைநடையில் எழுதப்படுகின்றன. பத்திரிகைகள் பலவும் சிறுகதைகளை வெளியிட்டன. தமிழ்ச் சிறுகதைகளின் வீச்சு என்பது கூடிக் கொண்டே வருகிறது. வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் வாழ்ந்தவர்கள் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்கள். சொந்த வாழ்க்கையை எழுதியவர்கள், அடுத்தவர்கள் வாழ்க்கையை எழுதியவர்கள்; மக்களை மேன்மைப்படுத்த எழுதியவர்கள்; தங்களின் அவலத்தை எழுதியவர்கள்; மற்றவர்கள் கொடூரம், சூழ்ச்சி, வஞ்சகம் என்பதையெல்லாம் எழுதியவர்கள், மன ஆசா பாசங்களை எழுதியவர்கள் - என்று பலரையும் - அவர்கள் எழுதிய கதைகளை வைத்துக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனால் கதையென்ற அளவில் எதுவும் பூரணம் பெற்றது இல்லை. பூரணத்தில் இருந்து பூர்ணம் என்பது எல்லாம் தத்துவமாகச் சொல்லிக் கொள்ளலாம். இலக்கியத்தில் பூரணம் என்பது வாழ்க்கைதான். அது வாழ்வது. வாழும் வாழ்க்கையைச் சொல்லச் சொல்ல நழுவிக் கொண்டே போகிறது. அதாவது சொல்லி முடித்துவிட முடியாது என்று தோன்றுகிறது. அதுவே எழுத வைக்கிறது.
புதுமைப்பித்தன் பெரிய எழுத்தாளர்; மெளனி சர்வதேச எழுத்தாளர்; ஜி. நாகராஜன் சொல்லத்தகாதது என்று சொல்லி ஒதுக்கி வைத்திருந்தவர்களின் வாழ்க்கையைத் துணிந்து சொன்னவர்; சமூக அவலத்தை சாட்டையால் அடித்துச் சொன்னவர் விந்தன் என்று சொல்லிக் கொண்டாலும் - அது சரித்திரம். நிகழ்ந்தது இருக்கிறது. ஆனாலும் புதிதாக எழுதவும் - படிக்கவும் இலக்கியம் தேவையாக இருக்கிறது. ஆனால் சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் இலக்கியம் படிப்பது இல்லை. அது அவர்களுக்குத் தேவை இல்லை. இலக்கியம் படிப்பதால் அவர் பெறுவதும் - இழப்பதும் ஏதுமில்லை என்று பெரிய பெரிய படிப்பாளிகள் சொல்லிக்கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியவில்லை என்பதால் இலக்கியம் அவர்களிடம் இல்லை என்பது கிடையாது. அது படிப்பு சம்பந்தப்பட்டது இல்லை, படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இலக்கியத்தில் கிடையாது.
மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலக்கியமாகவே வாழ்ந்து வருகிறார்கள். மொழியில் அவர்கள் வாழ்க்கை இலக்கியமாகச் சொல்லப்படுகிறது. படித்துத் தன்னைத் தானே அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது என்பது குறைபாடு இல்லை. அறிவது முக்கியம் இல்லை. வாழ்வதுதான் சிறப்பானது. அப்படிச் சிறப்பாக வாழ்ந்தவர்களில் சிலரின் வாழ்க்கைக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லப்பட்ட கதையின் வழியாகச் சொல்லப்படாத பலரின் கதைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்பதே எழுதுவதற்கு ஆதாரமாக அமைகிறது.
ஐம்பதாண்டு காலமாக எழுதிவரும் எழுத்தின் தொடர்ச்சி தான் ரம்பையும் நாச்சியாரும். எல்லோரும் இருக்கிறார்கள் என்பது அவர்கள் எப்போதும் இருக்கக்கூடியவர்கள் என்பதால்தான், அவர்கள்தான் உலகம்; மானிட சமூகம் என்பது அவர்களை வைத்துக்கொண்டுதான் சொல்லப்படுகிறது. ஏனெனில் அவர்கள் சொன்னதைவிட சொல்லாதது அதிகம்; செய்ததைவிட செய்யாதது கூடுதல் என்பது படிக்கையில் தெரிகிறது. அதுதான் படைப்பு என்பதை ஜீவிதமாக வைத்துக் கொள்கிறது
Release date
Ebook: 3 January 2020
English
India