Step into an infinite world of stories
“நீங்க தர்ஷன் முடிச்சாச்சா பாஸ்? இல்லேன்னா, இரண்டு பேரும் ஒண்ணா போய் சுவாமி தரிசனம் பண்ணிடுங்களேன். ஆபீசுல மட்டும்தான் பாஸ்-ஸ்டாஃப் உறவுமுறை. இங்கே சாதாரண ஃபிரண்ட்ஸ் மாதிரி நடந்துக்கலாமே!” என்று அப்போதுதான் ஞானோதயம் வந்தவள் போல் சொன்னாள் விவேதிகா. மிருத்யுவின் கண்களில் மின்னல் வெட்டியது. அதைக் காட்டிக் கொள்ளாமல், லாவண்யாவைப் பார்த்தான். லாவண்யாவுக்குச் சரியென்று சொல்வதைத் தவிர, வேறு வழியிருக்கவில்லை. முன்பின் பார்த்தறியாத இந்தப் பிரம்மாண்ட கோவிலை, அவளால் நிச்சயம் ஒற்றை ஆளாகச் சுற்றிப் பார்க்கமுடியாது. இவனோடு சேர்ந்து கோவிலைச் சுற்றினால் என்ன வந்தது? விவா சொன்னது போல் இங்கே இவன் பாஸ் இல்லை. ஃப்ரெண்ட் தான். லாவண்யா சரியென்று தலையாட்ட, கூந்தலில் சூடியிருந்த மல்லிகைச் சரங்கள், அவள் கழுத்தசைவுக்கு ஏற்ப அசைந்தன.
‘டேய்... கோவில்..டா... படவா...’ தன்னைத்தானே திட்டிக்கொண்டான் மிருத்யு. “நான் தர்ஷன் முடிஞ்சு திரும்பி வர்றவரைக்கும் நீ பத்திரமா இரு.” என்று அவன் விவேதிகாவிடம் சொல்ல, “என்னை எவன் தூக்கிட்டுப் போகப் போறான்? மனசுல இருக்கறதெல்லாம் நிறைவேறணும்-ன்னு நீ சுவாமிகிட்ட ஸ்ட்ராங்கா வேண்டிக்கோ.” என்று கட்டை விரலை உயர்த்தினாள் விவா. மிருத்யு-லாவண்யா இருவரும் கோவிலுக்குள் ஒன்றாகக் காலெடுத்து வைத்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த விவேதிகாவுக்கு மனம் நிறைய மகிழ்ச்சி. ‘யோகநந்தீஸ்வரா! உனக்கும், எனக்கும் வேணா, ‘டஃப்’ இருக்கலாம். ஆனால், மிருத்யு ரொம்ப நல்லவன். அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கற மாதிரி செய்.’ வெளியிலிருந்தே வேண்டிக் கொண்டாள் விவேதிகா.
Release date
Ebook: 17 August 2022
English
India