Step into an infinite world of stories
இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘மூங்கில் பூக்கள்', நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை.
இதில் வரும் ‘மூங்கில் பூக்கள்', வடகிழக்கின், தென்கோடியில் இருக்கும் மிஜோராம்மைக் களமாகக் கொண்டது. மிஜோ பழங்குடி மக்கள் வாழும் அந்த மாநிலம், நாகாலாந்துபோல அரசியல் கொந்தளிப்பு மிக்க மாநிலம். வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலுமே நீறு பூத்த நெருப்பாகக் கொந்தளிப்புகள் இருப்பதற்கு அரசியல் தத்துவார்த்த காரணங்கள் உண்டு. சுபாவமாக மாணவ பருவத்திலிருந்தே அரசியலிலும் சமூகவியலிலும் தீவிர ஆர்வம் கொண்ட நான் என் கணவருக்கு மிஜோராமுக்கு மாற்றல் என்றவுடன் வடகிழக்கு மாநிலங்களைப் பற்றின புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது, வெரியர் எல்வினின் “ஃபிலாஸ்ஃபி ஃபார் நீஃபா” ஜவஹர்லால் நேருவின் நண்பரான அவரது பார்வை விசாலமானது. பழங்குடி மக்களின் கலாச்சாரம் அலாதியானது, வளமானது, அதை அலட்சியப்படுத்தி, மத்திய நீரோட்டத்துடன் அந்த ஜனங்களை இணைக்கப்பார்ப்பது விவேகம் இல்லை என்கிறார் எல்வின்.
அந்த மாநிலங்களில் மக்கள் மத்திய அரசிடம் விரோதம் கொண்டதே அரசு நிர்வாகத்தில் இருந்தவர் (வெளியிலிருந்து வந்தவர்கள்) மாநில பழங்குடியினரை 'ஜங்க்லீ' காட்டுமிராண்டி என்று பரிகசிப்பதும், அவர்களது பெண்களை உபயோகப்படுத்தி கேவலப்படுத்தும் தான் காரணம் என்று எல்வின் சொல்வதில் உண்மை இருப்பதை நான் என் அனுபவத்தில் கண்டு உணர்ந்தேன். மூங்கில் பூக்களில் வரும் விபத்து ஒரு உண்மை சம்பவம். அது நாங்கள் மிஜோராம் தலைநகரான அய்ஜலில் இருந்தபோது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் நடந்தது. என்னை மிகப் பெரிய விசனத்தில் ஆழ்த்தியது. ஆனால் மூங்கில் பூக்களை நான் டில்லிக்கு வந்த பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துதான் எழுதினேன். அப்படியும் அந்த விபத்தை நினைவு கூறுகையில் என் கண்களில் நீர் பெறுகியது இப்பவும் நினைவிருக்கிறது.
மூங்கில் பூக்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு மாத்ரு பூமியில் வெளிவந்து பெறும் பாராட்டைப் பெற்றது. அதைப் படித்து உடனடியாக என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பட இயக்குனர் பத்மராஜன், 'கூடெவிடே' என்றுரைக்க தலைப்பிட்டுப் படமாக்கினார். அது தேசிய, மாநில விருது பெற்றது.
- வாஸந்தி
Release date
Ebook: 3 January 2020
English
India