Step into an infinite world of stories
5
Personal Development
மேலாண்மை என்றால் என்ன பொருள் என்ற கேள்விக்கு, ‘மேனேஜ்மெண்ட் என்பது மக்களைக் கொண்டு செய்ய வேண்டிய செயல்களை செய்து முடிப்பது' (Getting things done through people) என்கிறார் பார்கர் போலெட் (194I)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உலகப் பொதுமறை திருக்குறளிலும், விவிலியத்திலும், ஏராளமான மேலாண்மைக் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. எகிப்த்திய பிரமிடுகள், ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் போன்ற மனித இனத்தினால் செய்யப்பட்ட பல்வேறு சாதனைகள் திறம்பட்ட மேலாண்மை அறிவைப் பயன்படுத்தாமல் சாத்தியமாகி இருக்காது என்பது வல்லுனர்களின் முடிவு.
ஆக, மேலாண்மைத் திறனைப் பயன்படுத்துவது எல்லாக் காலகட்டங்களிலும் தேவைகளுக்கு ஏற்ப இருந்திருக்கிறது. ஆனால் அதை முறையாகக் கற்பிப்பது கற்பது என்கிற வழக்கம் மேலை நாடுகளில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இன்றைக்கு சுமார் 1,130 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கம்பராமாயணம் அரங்கேறிய கி.பி 885ம் ஆண்டு, கம்பரால் எழுதப்பட்ட இராமாயணத்தில் இருக்கிறதா என்று தேடியதில் எனக்குக் கிடைத்தவை, பெருவியப்பு ஊட்டுவதாகவும், உவகை தருவதாகவும் அமைந்தன. தொடக்கத்தில் மேனேஜ்மெண்ட் அனைத்துமே சயிண்டிபிக் மேனேஜ்மெண்ட் தியரிகளாகத்தான் இருந்தன. அவை பிரெட்டிரிக் டெய்லரும் ஹென்றி போயலும் சொன்னவை. அதன் பிறகு 'சோஷியல் சயிண்டிஸ்ட்’ தியரிகள் ஆப்ரகாம் மாஸ்லோ (ஹயரார்கி ஆப் நீட்ஸ்), எல்ட்டன் மாயோ (ஹியூமன் ரிலேஷன்ஸ் மூவ்மெண்ட்), டக்ளஸ் மெஃரிகர் (தியரி எக்ஸ், தியரி ஒய்) போன்றவர்களால் வந்தன.
இலக்கு ஏற்படுத்திக் கொள்ளுதல், திட்டமிடுதல், ஏற்பாடுகள் செய்தல், தகுந்த ஆட்கள் எடுத்தல், பயிற்சி கொடுத்தல், ஒருங்கிணைத்தல், தலைமை தாங்குதல், ஊக்கப்படுத்துதல், கண்காணித்தல், கட்டுப்படுத்தல் போன்றவை மேலாண்மையின் அடிப்படையான அம்சங்கள். இவை அனைத்துக்குமான தேவைகள் இராம காவியத்தில் இருந்திருக்கின்றன. அதனால் இவற்றை எப்படிச் செய்வது என்பது பற்றி கம்பன் விரிவாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கிறான். அவற்றில் சிலவற்றை தற்போதைய நவீன மேலாண்மை வழிமுறைகள், கருத்துகளுடன் ஒப்பிட்டுக் காட்டும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.
கம்பராமாயணத்தில் நமக்குக் கிடைக்க பெற்றிருக்கும் 12,000 பாடல்களில் இடைச் செறுகல்கள், மிகைப் பாடல்கள் என்று சுமார் 1500 பாடல்களை விட்டுவிட்டால் மீதம் உள்ளவை 10,500 பாடல்கள் என்று அறிஞர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள்.
கம்பராமாயணம் பக்தி இலக்கியம் மட்டுமே என்று எண்ணுவோரும் உண்டு. ஆனால் அதில் இருக்கும் அறிவியல், அரசியல், சமூகவியல், வானியல் என்று பல்வேறு விஷயங்களையும் அறிஞர் பெருமக்கள் பலரும் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்து கொண்டேயிருக்கிறார்கள். காரைக்குடி கம்பன் கழகம் அந்த அரிய பணியைச் செவ்வனே செய்து வருகிறது.
கம்பராமாயணம் முழுவதையும் படித்து என் வாதத்திற்குத் தேவையானதை அதிலிருந்து தேடிக்கண்டு எடுப்பது என்று முடிவு செய்து கொண்டேன். இராமாயணம் பாடல் வடிவத்தில் இருப்பது. ஆனால் எனக்குத் தேவைப்படுவது அதன் உரைநடை வடிவம். சுமார் பத்து பதினோரு வயதிருக்கும் போதே திருப்பாபுலியூரில் பெற்றோர் குடியிருந்தபோது, தாய் வழிப்பாட்டி வீர, கல்யாணி ஆச்சி கேட்பதற்காக, அவர்கள் கேட்டுக் கொள்வதற்கு இணங்க ராஜாஜி அவர்கள் எழுதிய சக்ரவர்த்தி திருமகன் இராமாயண உரைநடையை, என் அக்காள் திருமதி சௌந்தரலட்சுமி இராமநாதன் சத்தமாகப் படிக்க, பாட்டிக்கு அருகில் அமர்ந்து தம்பி, தங்கை ஆகியோருடன் நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆக, எனக்கு இராமாயணக் கதை நன்றாகவே தெரியும். ஆனால், அதில் உள்ள மேலாண்மைக் கருத்துகளை அல்லவா எடுத்துக் காட்ட நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்! அதற்குக் கதைச் சுருக்கம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. அதை இன்னும் ஊன்றிப்படிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் இன்றைக்குப் பேசப்படும், நடைமுறைப்படுத்தப்படும் பல மேலாண்மை தொடர்பான கருத்துகள், கோட்பாடுகள் அப்படியே பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கம்பராமாயணத்திலும் இருப்பது எனக்கு வியப்பை அளித்தது. குறிப்பாக மனிதவளத் துறை சார்ந்த கருத்துகள், உணர்வு மேலாண்மை (ஏமோஷனல் இண்டெலிஜென்ஸ்) கருத்துகள் என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தின.
கம்பராமாயணத்தில் காணப்படும் மேலாண்மை தொடர்பான விடயங்களை எடுத்துக்காட்டுவதுதான் புத்தகத்தின் நோக்கம் என்பதால், இதில் கருத்து பகுப்புகளை ஒட்டியே அத்தியாயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இராமாயணக்கதை எல்லோருக்கும் தெரியும். அதனால் இப்படிப்பட்ட பகுப்பு.
- சோம வள்ளியப்பன்
writersomavalliappan@gmail.com
Release date
Ebook: 11 December 2019
Tags
English
India