Step into an infinite world of stories
ஆலமரத்தடியில் செடிகள் வளராது... ஏன் ஒரு புல் பூண்டுகூட அதனடியில் முளைக்காது என்பார்கள், என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு ஆலமரம் அல்ல... இரண்டு ஆல மரங்களுக்கடியில் முளைக்க முயன்ற செடி எனலாம்.
எனது தந்தை சித்ராலயா கோபு திரைப்பட உலகில், கடந்த 50 வருடங்களாக நகைச்சுவைப் படங்களை எழுதி இயக்கி, கொடி கட்டிப் பறக்கிறார். காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், காசேதான் கடவுளடா, பாட்டி சொல்லைத் தட்டாதே என்று அவருடைய நகைச்சுவை வசனங்களை இன்றும் சிலாகித்துப் பேசி வருகின்றனர் ரசிகர்கள்.
இவர் ஒரு ஆலமரம் என்றால், மற்றொரு ஆலமரம் என் தாயார். 'கதவு'. ‘படிகள்', 'சுவர்' என்று இலக்கிய உலகில் பரிசுகளாக வாங்கிக் குவித்து. அந்தப் பரிசுகளையே கடைக்காலாக வைத்து தமிழன்னைக்குக் கோவிலே கட்டியிருக்கிறார் திருமதி. கமலா சடகோபன். அவர்தான் என் அம்மா. 'வருங்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?' என்று பள்ளியாசிரியர்கள் கேட்டபோது, 'எழுத்தாளனாக' என்று கூறியிருக்கிறேன். ஆனால் அப்பா வழியில் திரைப்பட எழுத்தாளனாகவா, அல்லது அம்மா வழியில் இலக்கிய நாவலாசிரியராகவா என்று என் தமிழ் ஆசிரியை கேட்ட போதுதான்... பதில் கூற முடியாமல் விழித்தேன்.
அப்பா வழியா...? அம்மா வழியா...? என்று யோசித்துக் கொண்டே காலத்தை வீணடித்துவிட்ட நான். வேறு வழியில்லாமல் 'என் வழி தனி வழி' என்று பத்திரிகையுலகில் நுழைந்து விட்டேன்.
1986இல் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்த நான். பிறகு ஐந்து வருடங்கள் இந்தியன் எக்ஸ்பிரசில் துணையாசிரியராகப் பணியாற்றினேன். 1992ல் 'தி இந்து' பத்திரிகையில் சேர்ந்த நான், தற்போது அதில் தமிழகப் பிரிவின் செய்தி ஆசிரியராக உள்ளேன்.
அலுக்க சலுக்க கட்டுரைகள் எழுதிய நான் அவற்றை பத்திரமாகப் பாதுகாத்து வந்தேன். ஒரு நாள், அந்தப் பேப்பர் 'கட்டிங்கு'களைப் படித்தபோது, அவை எனக்கு 'ஊசிப் போன தின்பண்டங்களைப் போலத் தோன்றியது.
செய்தி என்பது காலையில் தோன்றி மாலையில் வாடிவிடும் மலர் போன்றது. அதை மையமாக வைத்து எழுதப்படும் கட்டுரைகளும். விரைவிலேயே அர்த்தமற்றதாகிவிடும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
'என் வழி தனி வழி' என்று புறப்பட்ட நான்... அது தவறான வழி என்று காலங்கடந்தே புரிந்து கொண்டேன். அந்த நிமிடத்தில், என் அப்பாவைப் போல் நகைச்சுவை வசனங்களை எழுத முடிவு செய்தேன்.
சின்னத்திரையில் நுழைந்த நான். 'கிருஷ்ணா காட்டேஜ்', ‘அனிதா வனிதா' 'வித்யா' போன்ற தொடர்களுக்கு வசனங்கள் எழுதினேன். ஆனாலும் திருப்தி கிடைக்கவில்லை. மனச்சோர்வுடன் நான் இருந்த சமயத்தில்தான். என் அம்மா என்னை நாவல் ஒன்றை எழுதும்படி யோசனை சொன்னார். முயன்று பார்ப்போமே என்று நான் நினைத்த மறுநிமிடம், என் அடிமனதில் ஒரு குரல் அப்படி நாவல் எழுதுவதாக இருந்தால், உன் மனதில் கடந்த 25 வருடங்களாகத் தேக்கி வைத்திருக்கும் மர்மங்களை மையமாக வைத்தே எழுது' என்று அந்தக் குரல் பணித்தது.
என்ன மர்மங்கள் அவை?
1987ல் நான் இந்தியன் எக்ஸ்பிரசில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம், ஒரு மத்திய இணை அமைச்சரின் காரியதரிசியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த நண்பன் ஒருவன், எனக்கு போன் செய்தான் - போனில் ஒரு தகவலைச் சொன்னான்.
அது ஒரு கிசுகிசுதான்!
அந்த ஒரு வரி 'கிசு... கிசு'தான் இந்த நாவலின் கரு. ஒரு குறுநாவலைப் பெரும்நாவலாக எழுதலாம். ஒரு சிறுகதையைக்கூட, நாவலாக எழுதலாம். நான் ஒரு கிசு...கிசுவைத்தான் 400 பக்கங்களுக்கு நாவலாக எழுதியிருக்கிறேன். அந்தக் கிசு...கிசுவிற்கான ஆதாரங்களைத் தேடித் துருவி.... திரட்ட முற்பட்ட எனக்குப் பல அனுபவங்கள். சிலந்தி நூலாம்படை ஒன்றை பின்னுவது போல், அந்தக் கிசுகிசுவை மையமாக வைத்து என் கற்பனை நூலால் வலை ஒன்றைப் பின்னியிருக்கிறேன். அதுவே உங்கள் கைகளில் 'காலச்சக்கரமாக' சுழன்று கொண்டிருக்கிறது.
இந்த நாவல் எழுதி முடித்த உடனேயே, என் மனது நிறைந்துவிட்டது. பத்திரிகை உலகில் 25 வருடங்களாகக் கிடைக்காத நிறைவு இந்த ஒரு நாவலில் எனக்குக் கிடைத்து விட்டது.
அரசியல் விஞ்ஞானம். சட்டம், மருத்துவம். காதல், பக்தி. மாந்த்ரீகம், தாந்த்ரீகம், யோகம், நகைச்சுவை, மர்மம், கலாச்சாரம் என்று இந்தியத் திருநாட்டின் அத்தனை சிறப்பான விஷயங்களும் இந்த நாவலில் உண்டு. மூலிகைகளைக் கொண்டு சித்தர்கள் பழனி முருகனை வடித்தது போல், நல்ல விஷயங்களைத் திரட்டித்தான் காலச்சக்கரத்தை வடிவமைத்திருக்கிறேன்.
என் தாய் - தந்தைக்கும், இந்த நாவல் எழுதும் போது என்னைத் தனி உலகில் சஞ்சரிக்க அனுமதித்த என் மனைவி, குழந்தைகளுக்கும் நன்றி. இனி 'காலச்சக்கரம்' சுழலட்டும்.
அன்புடன்
நரசிம்மா
Release date
Ebook: 18 May 2020
English
India