Step into an infinite world of stories
ஆங்கிலத்திலிருந்து நான் மொழிபெயர்த்த நாவல் இவை. 'காதல் மேல் ஆணை'க்கு முன்பும், அதற்குப் பின்பும் சில நாவல்களை நான் மொழி பெயர்த்திருக்கிறேன். இருந்தும் முதல் புத்தகமாக இதை வெளியிடுவதற்குக் காரணம் எடிட்டர் எஸ்.ஏ.பி க்கு இது மிகவும் பிடித்த கதை என்பது தான். அவர் அமரராகும் வரையில் நான் மொழி பெயர்த்த நாவல்கள் எல்லாமே அவர் தேர்ந்தெடுத்து, என்னிடம் தந்து மொழி பெயர்க்கும்படி சொன்னவைதாம் என்றாலும், இந்த நாவலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. புத்தகக் கடைக்குப் போனால் ஆயிரக்கணக்கான புத்தகங்களிலிருந்து குறிப்பாக ஒரு பத்துப் பதினைந்து புத்தகங்களை வாங்கி வருவார் எடிட்டர். அந்தப் பத்தும் முத்தாக இருக்கும். அப்படித்தான் ஒரு நாள் டேனியல் ஸ்டீல் எழுதிய 'The Promise' என்ற புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். சிறிய நாவல். படித்துப் பார்த்தேன். ஒரு பணக்காரப் பையன், அவனுடைய திமிர் பிடித்த அம்மா, ஏழைக் காதலி - இவர்களைச் சுற்றிச் சுழலும் காதல் கதை.
"அப்படியொன்றும் விறுவிறுப்பாகத் தெரியவில்லையே? கதை நடு நடுவே தொய்கிறதே" என்று தயக்கத்துடன் கூறினேன்.
எடிட்டர் “ஒன்றும் தொய்யாது. தைரியமாகச் செய்யுங்கள்" என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றது. தொடர் கதையாக வெளி வருவதால் ஏதோ வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலட்சியமாக நினைத்திருந்து எனக்கு, கதை நிறைவு பெற்றபோது இனிய அதிர்ச்சி! ஏராளமான வாசகர்கள் மிகவும் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்கள். ‘காதல் மேல் ஆணை’ அவர்களை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கிறது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.
All the world Cover to Cover என்று சொல்வார்கள். உண்மையான காதல் என்றால் அது வெற்றி பெறுவதையே உலகம் விரும்பும். பணக்கார அம்மா, என்ன தான் பேரங்கள் பேசி, தந்திரங்கள் செய்து மகனையும் அவனுடைய காதலியையும் பிரிக்க முயன்றாலும் இறுதியில் அவர்கள் இணைகிறார்கள் என்பதால் இக்கதை வாசகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.
இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். டேனியல் ஸ்டீல் எழுதிய முதல் நாவல் இது. இதை வைத்தே, சிலர் பிற்காலத்தில் பெயர் பெற்ற நாவலாசிரியராக வருவார் என்று எடிட்டர் கண்டு பிடித்து விட்டார். அவருடைய யூகம் தப்பவில்லை. இன்றும் டேனியல் ஸ்டீலின் நாவல்கள் அடுத்தடுத்து வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்த போது Wings என்ற அவரது லேட்டஸ்ட் நாவல் கடைகளில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அமோகமாக விற்பனையாகும் முதல் பத்து நாவல்களின் பட்டியலில் அதுவும் ஒன்று என்று பல வாரங்களுக்குப் பத்திரிகைகள் குறிப்பிட்டுக் கொண்டிருந்தன.
எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்களின் நுண்ணறிவையும் தீர்க்கதரிசனத்தையும் எண்ணி வியந்து, இப்புத்தகத்தை அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்குகிறேன்.
- ரா. கி. ரங்கராஜன்
Release date
Ebook: 11 December 2019
English
India