Step into an infinite world of stories
4.6
Biographies
ஏப்ரல் மாதம் 2004ல் ஆரம்பித்தது இந்தப் புத்தகத்திற்கான வேலை. என் சகோதரர் வஸந்த் சொல்லி, கே.பாலசந்தர் அவர்களின் மகள் திருமதி புஷ்பா கந்தசுவாமி அவர்களை அவர்களது அபிராமபுரம் வீட்டில் ஒரு காலைப் பொழுதில் சந்தித்தேன். பேசினோம். ''அப்பா இதுவரை சொல்லாதவற்றைப் பற்றி சொல்ல இருக்கிறார்கள். மனம் திறக்க இருக்கிறார்கள்'' என்றார் மகள்.
நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. 2004ம் ஆண்டு, ஆகஸ்ட் எட்டாம் தேதி நான் சென்னைக்கு அருகில் இருக்கும் சிறுவாபுரி முருகன் கோவிலில் காத்திருக்கையில் கைபேசியில் அழைப்பு வந்தது. பேசியது புஷ்பா கந்தசுவாமி அவர்கள்தான். இன்றைக்கு மீட் பண்ணலாமா? ஆறு மணிக்கு'' என்றார்கள்.
அதற்கு முன் அவரது அலுவலகம் சென்று ‘பேப்பர் கட்டிங்க்ஸ்' மற்றும் ஏனைய பைல்கள் பார்க்க ஏற்பாடானது. கே.பி அவர்களது அலுவலக அறையில் தனியாக அமர்ந்திருக்கிறேன். மேசைமீது பல்வேறு பைல்கள். பைல்களை புரட்டப் புரட்ட பிரமிப்பு வந்து பின்பு அதுவே மலைப்பாகி, இந்த மலையை எப்படிப் புத்தகம் என்ற டப்பாவிற்குள் அடக்குவது என்கிற அச்சம் வந்தது.
15.8.2004 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கே போய்விடுகிறேன். திரு. கே.பி. அவர்களின் வாரன் ரோடு வீடு. கே.பி. 3.25-க்கு வருகிறார். ஆரம்பிக்கிறோம்.
மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகவும், ரெஸ்ட் தேவை என்றும் சொல்லிவிட்டார்கள். அதனால்தான் ஆரம்பிப்பதில் தாமதம் என்று சொன்னார். அவர் ரொம்ப 'திங்க்' பண்ணக் கூடாதாம்.
அவரது டேப்ரிக்கார்டரை எடுத்துக் கொடுத்தார். அப்போது அவர் கை லேசாக நடுங்குவதைப் பார்த்தேன். அவ்வளவு தளர்ந்து போயிருந்தார். அவ்வளவு பெரிய ஜாம்பவானை, சிங்கத்தை அவரது முழு வேகத்தில் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. "புஷ்பாவும் வஸந்தும் கம்பெல் செய்ததால்தான் இதற்கு சம்மதித்தேன்'' என்றார்.
முதலில் ஊர், பிறப்பு, தந்தை, படித்த பள்ளி பற்றி பேச்சு போனது. அடுத்து தங்கை பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது அவரது கண்கள் கலங்கின. பேச்சை நிறுத்திவிட்டு டேப்பை ஆப் செய்தார். சற்று நேரம் மவுனமாக இருந்துவிட்டு, Re-living என்றார்.
இருபது முதல் இருபத்து ஐந்து முறை வரை அவரை சந்தித்திருப்பேன். ஒவ்வொரு முறையும் குறைந்தது இரண்டு மணிநேரம் பேசியிருப்போம். அனேகமாக எல்லா மீட்டிங்கும் அவரது வாரன் ரோடு வீட்டில் அவரது அறையில்தான். மாலையில்தான். யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். அப்போது அவரிடம் எடுத்த பேட்டியின் சுருக்கம்தான் இந்தப் புத்தகம். அவரது ஆரம்பகால வாழ்க்கை, நாடகங்கள் மற்றும் திரைப்பட பிரவேசம் குறித்து அவரே சொல்லச் சொல்லக் கேட்டு எழுதப்பட்டவை.
ஒரு குறிப்பிட்ட நேரம் அவர் 'பொய்' திரைப்படம் எடுக்கும் வேலையில் இறங்கிவிட்டதால் சந்திப்பு நின்றுபோனது. அதன்பின் தொடரவில்லை. அதன் பின் ஒன்றிரண்டு பொது நிகழ்ச்சிகளில் சந்தித்தபோது, எப்போது தொடரலாம் என்று கேட்டதற்கு, செய்யலாம் செய்யலாம் என்று சொன்னார். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை.
ஆண்டுகள் பல ஓடிவிட்டன. டிசம்பர் 2014ல் மறைந்துவிட்டார். அவர் மறைவின்போது சன் நியூஸ் தொலைக்காட்சி அவரது இறுதி ஊர்வலத்தை நேரடி ஒலிபரப்பு செய்தது. அது சமயம் நிலையத்துக்கு அழைத்தும், தொலைபேசி வாயிலாகவும் அவருடன் பழகிய பணியாற்றிய பலரிடமும் பேட்டி எடுத்தார்கள். அப்போது நிகழ்ச்சியை நடத்திய திரு. பாலவேல் தொலைபேசி வாயிலாக என்னிடம் கே.பி.யின் படங்கள் பற்றிக் கேட்டார். நான் என் பார்வையைச் சொன்னதுடன் அவருடன் அமர்ந்து அவரது வாழ்க்கை வரலாறு எழுதிய அனுபவத்தைப் பற்றியும் குறிப்பிட்டேன்.
அதற்கு பாலவேல், தானும் அவரைப் போல பாலசந்தர் அவர்களின் ரசிகர்கள் பலரும் காத்திருப்பதாக சொன்னார். அப்போதுதான் எனக்கு எழுதியது வரையிலான, என் புத்தக அலமாரியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த, கே.பி. அவர்களே சொல்லிய, அவர் பற்றிய தகவல்களைத் தமிழ் மக்களுடன் அவசியம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
கே.பி. எவ்வளவு பெரிய படைப்பாளி! அவரே அவரைப் பற்றியும் அவரது அந்தக் கால எண்ணங்கள் மற்றும் பார்வை குறித்தும் சொல்லியவை இவ்வளவு இருக்கிறதே. இதை நான் மட்டும் தெரிந்து கொள்ளவா அவர் சொன்னார்! அவரது வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள, அவரது ஆர்வங்கள், முயற்சி, உழைப்பு, வெற்றிகள் மற்றும் மேன்மை குறித்து உலகம் அறிந்து கொள்ள என்னிடம் இருக்கும் அரிய தகவல்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
இதில் இருக்கும் தகவல்கள் பலருக்கும் அரியனவாகவும் சில புதியனவாகவும் இருக்கும். முக்கியமாக மிகச் சரியாக இருக்கும். அதில் எந்த ஐயமும் வேண்டாம்.
நன்றி.
சோம வள்ளியப்பன்.
writersomavalliappan@gmail.com
Release date
Ebook: 15 September 2020
English
India