Step into an infinite world of stories
Fiction
நினைவின் அடிவாரத்தில் இக்கதைகள் கருவூன்றும் நெஞ்சக் கிளர்ச்சியாக முதன் முதலாய் நான் உணர்ந்தது, குழந்தையின் கன்ன மிருதுவும், குஞ்சுக் கைகளின் பஞ்சும், கொழ கொழ உடலின் மெத்தும், தொடைகளின் அடிச் சதையின் பூ நயமும்தான். அவையும் தானோ இவைகளுக்கு இதழ்கள் எனும் பொதுத் தலைப்பும் நேர்ந்தது.
இக்கதைகள் முழுக்க முழுக்கக் குழந்தைகளைப் பற்றியே இருக்க வேண்டும் என என் ஆரம்ப அவா. ஆனால் காரியத்தை மேற்கொண்ட பின்னரே அது எவ்வளவு எட்டாக் கனியெனத் தெரிந்தது. வயதுவாக்கில் உப்பும் ஜலமும் உடலில் ஊற ஊற கோபதாபங்களும், நானாய் இழைக்கும் தவறுகளும், பிறர் கண்டுபிடிக்கும் குற்றங்களும் நெஞ்சை விஷமாக்கி, என் கன்னித் தன்மையையும் இழந்தபின், குழந்தைகளின் உலகில் என்னால் எப்படிப் புகமுடியும்? ஆயினும் என் அவாவின் சாயைகளாய், இக்கதைகளின் இடையிடையே குழந்தைகளும் குழந்தைகளைப் பற்றிய எண்ணங்களும் நடமாடுகின்றன. சில இடங்களில் வெளிச்சமாய் உலாவுகின்றன; சில இடங்களில் வெறும் நிழலாட்டமே நடுங்குகிறது; பல இடங்களில், துருவன் எவர்க்கும் எட்டாத் தன் நக்ஷத்திர பதவியினின்று பூக்கும் புன்னகை என்னைத் திகைக்க அடித்துத் திகைப்பூண்டில் தள்ளுகிறது.
இதழ்கள் பூவின் உள் ரகஸ்யத்துக்கு அரணாயும், வெளிக்கு அழகாயும், வண்டுகளை ஈர்க்கவும் அவை தேனைப் பருகுகையில் அவைகளை ஏந்தவும் அமைந்திருக்கிறனவே தவிர, இதழ்கள் பூவின் ஆதார பாகம் அல்ல என்று என் மருமாள் கூறுகிறாள். இதழ்களிலேயே அகஇதழ் புற இதழ் எனப் பிரிவுகள் உண்டு என்று மேலும் விவரிக்கிறாள். காலையிலே திறந்து மாலையிலே குவியும் பூ, மணமற்று அழகுற்ற பூ, அழகிலாது மணம் நிறைந்த பூ, பூப்பதே தெரியாத பூ, ஒரு குடம் தண்ணி வார்த்து ஒரே பூ, ஒரே குடம் தண்ணி வார்த்து ஒரு பூ, பறிக்க இயலாத பூ, உதிர்ந்த பூ, பாறை மேல் பூ, பாலையில் பூ, குடலை நிறையக் குலுக்கிக் குலுக்கிப் பூ, நெருங்கினாலே நடுங்கிவிடும் பூ, காகிதப் பூ, ஆடும் பூ, சூடும் பூ. சூடாத பூ - இன்னும் அடுக்கிக் கொண்டே போகிறாள், நான் உள் சுருங்குகிறேன்.
நேற்றுப்போல் இருக்கிறது; சரியாய் ஒரு வயதில் என்னிடம் வந்து, என் இருண்ட நேரங்களின் துணை வெளிச்சமாய். அவ்வெளிச்சத்திலேயே நான் படிக்கும் பாடமாயும் இருந்து, வளர்ந்து, மணந்து, இப்போது இரு குழந்தைகளுக்கு தானே தாயாய் விளங்குகிறாள். என் கண்ணெதிரிலேயே கருவாகி, உருவாகி, பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி, இப்பொழுது தானே ஒரு இல்லத்தின் கிழத்தியாகி - அன்று நான் ஆபிஸிலிருந்து வரும் போது வாசற்படியிலேயே முழங் காலைக் கட்டித் தொங்கிக் கொண்டு அப்படித் தொங்கியபடியே, அவளை நடையோடு இழுத்துக் கொண்டு, நான் உள் செல்கையில் சோழிப்பற்கள் தெரியச் சிரித்த குழந்தை அவளேயா இவள், தானே தாயாய், தன் பாஷையில் மலர்களைக் கொட்டிக் கொண்டு, எனக்குப் பாடம் படிப்பிக்கின்றாள்! நினைக்கையிலே
உவகை பூக்கிறது. மனம் மணக்கிறது. என் வாணாள் முற்றிலும் வீணாள் ஆகவில்லையெனத் தெளிவு மலர்கிறது.
சென்ற மாதம் சேகர் ஆஸ்பத்திரியில் கிடந்தான். சுவாசப் பைகளில் ஜளி உராய்ந்து, குழந்தை மூச்சுவிட முடியாது, பிராண வாயுவை மூக்கில் குழாய் மூலம் செலுத்தியாகிறது. அவன் அசையாதபடி அவன் கரங்களை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி, சிறகுகளை விரித்த கோழிபோல், கட்டிலைச் சுற்றிச் சுற்றி வந்து, தாய்மையில் தவிக்கிறாள். குழந்தையின் அந்நிலைமையில் அவனை அணைத்துக் கொள்ள முடியாதாகையால், தன் மார்பிலிருந்து ஒரு ஒரு ஸ்பூனாய்ப் பாலைக் கறந்து அவன் வாயுள் ஊற்றுகிறாள். அவள் மறு ஸ்பூனில் கறக்கும் வரை குழந்தைக்கு அவசரம் தாங்கவில்லை. இலைபோல் தளிர் நாக்கை நீட்டிக் காட்டி ‘அ ஆ’ என்கிறான். அக்காட்சி நெஞ்சைப் பிழியும். அப்பவே என் குழந்தையின் அருமை என் நெஞ்சில் இதழ் விரிகின்றது. - என்ன சொன்னேன்? பூத்தேனா, மணத்தேனா மலர்ந்தேனா, விரிந்தேனா? ஓ, விஷயமே இதுதானா! விஷயத்தின் விஷயம். நெஞ்சின் மலர்ச்சி, மலரின் நெஞ்சம். பிறர் மணம் என்மேல் வீசியதே காரணம் தான் என் மலர்ச்சியா?
ஆனால் நான் பூவல்ல, இதழ்; இதழுமில்லை; பூவோடு சேர்ந்த நார். இதை இப்போது, அல்லது இம்மாதிரி சமயங்களில், அறிந்து கொள்ள முடிந்தவரை அறிந்து கொண்டதே என் செருக்கு. என் செருக்கே என் மலர்ச்சி. இது இளமையின் புது மலர்ச்சியல்ல; முதுமையின் மறுமலர்ச்சி. புற இதழுள், அக இதழ் இம்முறையில் எல்லோரும் இதழ்களே. பூவின் மலர்ச்சியில், அதனின்று கமழும் மணத்தில் நமக்கும் பங்கு உண்டு. இதழ் மேல் தங்கி வண்டுகள் பருகும் தேன் நம் மேலும் சிந்துகிறது. நாம் பாக்யவான்கள். நம்முடைய இந்தப் பரஸ்பரத் தன்மையை இக்கதைகள் வெளியிடின் இவை வீணாகவில்லை.
இது ஒருவரே ஏற்றுச் செய்துமுடித்து மார் தட்டிக் கொள்ளும் காரியமல்ல. இரு இதழ் பூவாகிவிட முடியாது. நாம் எல்லோரும் இதழ்களே.
- லா. ச. ராமாமிருதம்
Release date
Ebook: 18 May 2020
English
India