Step into an infinite world of stories
1902-ம் ஆண்டில் துவங்கி 1998ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த மூன்று தலைமுறைக் குடும்பங்களின் பழக்க வழக்கங்கள், ஆசார நம்பிக்கைகள், காலத்தின் சுழற்சியில் எவ்வித மாற்றங்களுக்கு உள்ளாகின்றன என்பதை என்னுடைய 'பாலங்கள்' புதினத்தில் விரிவாக எழுதியிருந்தேன். 'பாலங்கள்' புத்தகம் வெளியான பிறகு அதற்குக் கிடைத்த வரவேற்பு எனக்குப் பெரும் நிறைவைத் தந்தது என்றால், அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு கடிதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ‘நாங்கள் இந்த மண்ணில் குடியேறிப் பல வருஷங்கள் ஆகிவிட்ட நிலையில், எங்கள் ஒரே பிள்ளைக்கு உபநயனம் செய்ய ஆசைப்பட்டோம். எங்கே போய், யாரைப் பார்த்து இதைச் செய்வது என்று புரியாமல் நின்றபோது, உங்கள் 'பாலங்கள்' புத்தகம் எங்களுக்குக் கைகொடுத்தது. அதில் விவரித்திருந்த வகையில் சின்ன வைபவமாக எங்கள் பிள்ளைக்குப் பூணூல் அணிவிக்கும் சடங்கை நடத்தி விட்டோம். உங்களுக்கு எங்கள் நன்றி' என்று ஆத்மார்த்த சந்தோஷத்தோடு அமெரிக்க வாசகி எழுதியிருந்த கடிதம், முதலில் எனக்குத் திகைப்பைத் தந்தாலும், பிறகு அது குறித்துத் தீவிரமாய் சிந்திக்கவும் வைத்தது.
50 வருஷங்களில் உலகம் அடையாளம் புரியாத அளவுக்கு ரொம்பவும்தான் வித்தியாசமாகிவிட்டது! முன்பு மக்களுக்கு நிறைய நேரம் இருந்தது; உறவுகளோடு மனம்விட்டுப் பேச முடிந்தது. நான்கு நாட்கள் நடந்த திருமணங்களில், 13 நாட்களுக்கு நீண்ட துக்க சடங்குகளில், நிதானமாய் பங்கேற்கவும், இன்னும் பல காரியங்களில் ஆற அமர ஈடுபடுத்திக் கொள்ளவும் அவகாசம் இருந்தது. ஆனால் இன்று? கூட்டுக் குடும்பங்கள் மறைந்து, வீட்டு அலுவலக வேலைகளும், டி.வி. இன்டர்நெட்டும் நம் சிந்தனையை ஆக்ரமித்துவிட்டதில், மேலே குறிப்பிட்ட காரியங்களை நின்று நிதானமாய் செய்ய நம்மில் பலருக்கும் அவகாசம் இல்லை; அதிசயமாய் நேரம் கிட்டி, விருப்பம் இருந்தாலும், பழக்க வழக்கங்களில் பழையன கழிந்து, புதியன புகுந்துவிட்டதில், பாரம்பரிய விஷயங்களை நமது மூத்தோர் செய்த வகையில் செய்யும் வழிமுறைகள் தெரியவுமில்லை - என்பது தான் பல குடும்பங்களில் காணப்படும் பிரத்யட்ச நிலை! என்னுள் தோன்றிய ஆர்வம், ஏன், அதைக் கவலை என்றுகூடச் சொல்லலாம். திருமதி அலமேலு கிருஷ்ணன் அவர்களுக்கும் எழுந்ததுதான் 'கௌரி கல்யாணம் வைபோகமே' என்ற அற்புதமான நூல் பிறக்கக் காரணம். திருமதி அலமேலு - என் சொந்த சித்தப்பாவின் மனைவி. குடும்பத்தில் அனைவருக்குமே அலமேலு மன்னி! 40 வருஷங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்துக் கல்யாணங்களிலும் அலமேலு மன்னியிடம் தான் விசேஷ பொறுப்பான 'பணநிர்வாகம்’ ஒப்படைக்கப்படும். பணப்பெட்டி, நோட்டு சகிதம் திருமண வீட்டின் ஒரு அறையில் உட்கார்ந்தாரென்றால், ஒரு பைசா விவகாரம்கூட அவரைத் தாண்டித்தான் போகவேண்டும். சாப்பாடு, பந்தல், ஜோடனை, மேளக்காரர், வைதீகச் சடங்குகளில் துவங்கி, ஆசீர்வாத பண விவரம் வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கண்காணித்து, நோட்டில் பதிவு செய்து, கணக்குவழக்கை உரியவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் நகருவார்.
அண்மையில் அலமேலு மன்னியைச் சந்தித்தபோது அவர் எழுதி வைத்திருந்த இந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியைக் காண நேர்ந்தது. அதை வாங்கி வந்து படித்தேன். பிரமித்தேன். 40 வருடங்களுக்கு முன் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விலாவாரியாகத் திருமணங்கள் நடத்தப்பட்டதையும், சில ஆயிரம் ரூபாய்களில் ஒரு பெரிய சடங்கை விதரணையாய் நடத்தி முடிக்க முடிந்ததையும் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், என் பிரமிப்பு கூடிப்போனது. கால அவகாசமும் செலவுகளும் மாறி விட்டபோதும், அது இந்தத் தலைமுறைக்கு மிக உபயோகமான ஆவணம். ஒருகாலத்தில் திருமணங்களில் தரப்படும் சீர் வரிசைகளோடு மீனாட்சி அம்மாள் எழுதிய 'சமைத்துப் பார்' புத்தகத்தின் பிரதிகளும் கட்டாயம் இருக்கும். என்னையும் சேர்த்து எண்ணிலடங்கா பெண்கள் சமைக்கக் கற்றுக் கொண்டதே 'சமைத்துப்பார்' மூலம்தான்! இன்று மறைந்து வரும் பூர்வ பழக்கங்கள், சடங்குகளை நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள 'கௌரி கல்யாணம் வைபோகமே' உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. காண்ட்ராக்ட் ஏஜண்டுகளிடம் சகல பொறுப்புகளையும் தந்துவிட்டு அக்கடா என்று எல்லோரும் இருக்கும் இந்நாட்களில், இப்புத்தகத்தில் காணப்படும் விதமாய் திருமணங்கள் செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழலாம்... நான் மறுக்கவில்லை. என்றாலும், நம் குடும்பத்துப் பழக்க வழக்கங்கள் எப்படியிருந்தன என்பதை நமக்கு, முக்கியமாய் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில், இது புத்தகம் அல்ல; ஒரு கையேடு; ஒரு வழிகாட்டி!
- சிவசங்கரி
Release date
Ebook: 18 May 2020
English
India