Step into an infinite world of stories
அப்பா என்ற நபரை மீறி ஒரு ரசிகனாக இவரின் எழுத்துக்களை பார்க்கும்போது எத்தனை விதமான படைப்பாற்றலைக் கொண்டிருந்தார் என்பதை சுட்டிக்காட்டி இந்த 'எண்ணக் கிணறு' என்னை வேறு ஒரு உலகத்திற்கு கூட்டிச் சென்றது.
முகநூலில் அவர் கால் (கை?) பதித்தபோது அவருக்கு வயது 82 (2012). 'எண்ணக் கிணறு' எழுத ஆரம்பித்தபோது வயது 84. அவருடைய கிண்டலுக்கும், நையாண்டிக்கும், ஆன்மீகத்துக்கும், தத்துவ பார்வைகளுக்கும் பல்வேறு முகங்கள் உண்டு என்று எடுத்துக்காட்டியதும், அவர் இந்த முகநூலை உபயோகித்த விதமும், என்னை மிகவும் வியக்க வைத்தது.
அப்பா எந்தவொரு விசேஷத்திற்கும், நிகழ்ச்சிக்கும் சென்றாலும் அவரை சந்திக்கும் பிரமுகர்கள், ரசிகர்கள் 'எண்ணக் கிணறை' பற்றி விசாரிக்காமல் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த 'எண்ணக் கிணறு' முகநூலில் பிரபலமானது. (முகநூலில் அவரை 5000 பேர் பின்தொடர்ந்தனர்.)
அவர் எந்த ஒரு சின்ன விஷயத்தையும் - உதாரணத்துக்கு - 'ஆனியன் ரவா தோசை' கட்டுரை - விலாவாரியாக வேடிக்கையாக விவரிக்கும் விதத்தை மீறி, நான்கு வரிகளில் தன்னுடைய observing power (கூரிய பார்வை)ஐ உபயோகித்து அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி, அவருடைய கடைசி நாட்கள் வரை (87 வயது) இந்த வற்றாத கிணறை தவறாமல் தினமும் வழங்கிக்கொண்டிருந்தார்.
இதில் தன் மனைவியை ஒரு targetஆக வைத்து கிண்டல்களும், தன் உடல், இந்த வாழ்க்கை - நிரந்தரமானது அல்ல என்று உறுதியாக நம்பி அதிலும் ஒரு நகைச்சுவை கொண்டு வருவதும் அவருக்கு கைவந்த கலை.
ஒவ்வொரு எண்ணமும் ஒரு முத்தாக, எல்லோர் வாழ்க்கையில் உபயோகப்படக் கூடியதாகவும், ஒரு பிரமாதமான மாலையாக கோர்த்து அணிவித்திருக்கிறார்.
அனைவருக்கும் பொருந்தும் வகையில் எப்படி ஒரு வாழ்க்கையை நடத்தவேண்டும் என்று 'ஒரு நகைச்சுவை கோனார்' உரை போல தந்திருக்கிறார்.
அப்புசாமித்தனத்தை, தன் வாழ்க்கையின் கடைசி 17 வருடங்கள், 'அக்கறை' என்ற அமைப்பைத் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமையன்று, அந்த நண்பர்களுடன் செலவழித்துப் பெருமகிழ்ச்சி கொண்டார்.
வாழ்க்கையின்மீது ஏற்கெனவே ரசனை கொண்டிருந்த அப்பாவுக்கு, இந்த அக்கறை நட்பு, அந்த ரசனையை மேலும் அதிகமாக்கியது.
அனில்ராஜ் அப்பாவின் காரியதரிசியாக இருந்து மட்டுமல்ல இன்று அவரது அனைத்து எழுத்துக்களையும் தட்டச்சில் கொண்டு வந்ததற்கு நன்றிகள் பல.
அன்புடன்
யோகேஷ்
Release date
Ebook: 3 January 2020
English
India