Step into an infinite world of stories
அத்திமலைத்தேவன் சரித்திர புதினத்தின் மூன்று பாகங்களையும் படித்துவிட்டு, அலைபேசியின் மூலமாகவும், தொலைபேசியின் வாயிலாகவும், மின்னஞ்சல்களிலும் என்னுடன் தொடர்புகொண்டு பேசியவர்கள், பிரமிப்புடன் என்னிடம் கூறிய கருத்து, 'நகரேஷு காஞ்சி' என்று அறிந்திருக்கிறோம். அத்திவரதன் வெளிவந்த ஒன்பதாம் நாள் நான் அவனைத் தரிசித்தேன். அவனைக் கண்டதும் எனது மேனி சிலிர்த்தது. அஸ்வத்தாமா துவங்கி இன்றைய தலைவர்கள் வரை எத்தனை பேர் அவனைத் தரிசித்திருக்கின்றனர். எத்தனை போர்களை அவன் பார்த்திருக்கிறான். ஒன்பது அடி மேனிதான். ஆனால் பாரதச் சரித்திரம் முழுவதும் அல்லவா வியாபித்து நிற்கிறான். மனமுவந்து இந்த எளியவன் எழுதும் புதினத்தின் கதை நாயகனாகத் திகழ சம்மதித்த அவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அடுத்த முறை அவன் வரும்போது அவனைக் காண நான் இருக்க மாட்டேன் என்றாலும், எனது புதினத்தை 2059னில் வாசித்தவர்கள் அவனைத் தரிசிக்கச் செல்வார்கள் அல்லவா...?
ருத்ராக்ஷர் என்கிற உருத்திரன் கண்ணனார் கரிகாலனை காப்பாற்றியது, இளந்திரையன் மற்றும் கரிகாலன் என்கிற சகோதரர்களிடையே நடைபெற்ற தன்மானப் பிரச்னை போன்ற புதிய தகவல்கள் மலைப்பை ஏற்படுத்தின என்றனர். காஞ்சி தொன்மையான நகரம். நான் முன்பே கூறியது போன்று, ஆயர்பாடி காலம் தொடங்கி இப்போதைய காலம் வரையில், காஞ்சி என்கிற நகரம் பல அரசியல் திருப்பங்களுக்குக் காரணமாக இருந்துள்ளது.
மூன்று பாகங்களில் பலருக்கு பல்வேறு கதாபாத்திரங்கள் பிடித்திருந்தாலும், அனைவராலும் இரசிக்கப்பட்ட பாத்திரங்கள் ராஜஸ்ரீ மற்றும் ராஜ வர்மன். மதியூகமும் நன்னடத்தையும் கொண்ட ராஜஸ்ரீ எங்களைப் பெரிதும் கவர்ந்துவிட்டாள் என்று பலரும் கூறினார்கள்.
“உங்கள் நடையில்தான் என்ன வேகம்” - என்று அனைவருமே பாராட்டுகின்றனர். முதல் பாகம் மிகவும் விறுவிறுப்பு. அதற்கடுத்த பாகம் இன்னும் விறுவிறுப்பு, மூன்றாம் பாகம் அதைவிட விறுவிறுப்பு என்றுதான் வாசகர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, தொய்வு இல்லை என்று அனைவருமே கூறுகின்றனர். அத்திமலைத்தேவனின் நிறைவுகளுக்கு அவனே காரணம். குறைகள் இருந்தால், அவை என்னுடைய தவறுகளாக மட்டுமே இருக்க முடியும்.
வெள்ளிக்கிழமை ஜூன் 21, 2019, ஒரு மறக்க முடியாத நாள். அன்றுதான் மூன்று பாகங்களை முடித்துவிட்டு, நான்காம் பாகத்தினுள் பிரவேசித்துக் கொண்டிருந்த என்னை, அத்திமலைத்தேவன் காஞ்சிக்கு அழைத்தான். சுவாமி லக்ஷ்மிநரசிம்மன் என்கிற கிட்டு பட்டரை சந்தித்தேன். அனந்தசரஸ் என்னும் திருக்குளத்தின் உள்ளே அழைத்துச் சென்று எனக்குக் கிட்டு பட்டர் சிலையை எடுக்கும் விதம் குறித்து விளக்கினார்.
இருபத்து ஐந்து அடி ஆழம் உள்ள குளத்தில் பன்னிரண்டு அடி அளவு நீரை எடுத்துவிட்டு, சேறும் சகதியுமாக உள்ள பகுதியில் நடந்து சென்று இன்னும் பன்னிரண்டு அடி கீழே இறங்கினால், ஒரு இருண்ட பகுதி வரும். அங்கே ஒரு தொட்டி இருக்கும். அதில் நீர் வழிந்து கொண்டிருக்கும். அதன் உள்ளேதான் அத்திமலையான் சயனித்துக் கொண்டிருக்கிறான். உள்ளே இருக்கும் தேவ உடும்பர அத்தி மரத்தினாலான சிலை நீரில் மிதந்து கொண்டிருக்கும். சிலை வெளியே வந்துவிடாதபடி, தொட்டியின் ஓரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் நாகப்பாசங்கள் (clamps) அந்தச் சிலையை வெளியே வரவிடாமல் தடுக்கும். நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை, நாகபாசங்களை நீக்கி, சிலையை வெளியே எடுத்து ஆராதனை செய்து விட்டு, மீண்டும், குங்கலீயம், புனுகு மற்றும் சந்தனாதி தைலங்களைத் தடவி தொட்டியில் பத்திரப்படுத்தி விடுகிறார்கள். நான் முதல் பாகத்தில் குறிப்பிட்டது போன்று, தண்ணீரின் அடியில் அத்திமலைத்தேவனுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.
அவனை அதீத எச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின்பே அர்ச்சகர்கள் அணுகுவார்கள். உக்கிர மூர்த்தியான அவனை இருபதுபேர் எடுத்து வருவார்கள். அதற்கு அவர்கள் வருடத் துவக்கத்தில் இருந்தே உடலாலும், மனதாலும் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள் இருப்பினும், பலர் நாற்பது வருடங்களுக்குப் பிறகு அவனைச் சந்திக்கும் போதும், முதன் முறையாக அவனைக் காணும் போதும், ஒரு வகை மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள். அவ்வகையில் ஒரு பட்டர் ஏழு வருடம் மன அழுத்தத்தில் இருந்தார் என்று கிட்டு பட்டர் என்னிடம் தெரிவித்தார்.
பட்டர்களின் பணி விக்கிரகங்களை அலங்காரப்படுத்துவதும், தேங்காய் உடைப்பதும் மட்டுமே என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் ஆபத்தான பணிகள் உள்ளன என்பதைப் பலர் உணரமாட்டேன் என்கிறார்கள். அனந்தசரஸ் குளத்தின் ஆழத்திற்குச் சென்று ஆபத்துகளைச் சந்திப்பவர்களும் உண்டு.
அவர்களை நான் வெறும் பட்டர்களாகப் பார்க்கவில்லை. நமது பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் அதிகாரிகளாகவே நினைக்கிறேன். அவர்களது தியாகங்களுக்கு எனது அத்திமலைத்தேவன் சமர்ப்பணம்.
Release date
Ebook: 18 May 2020
English
India