Step into an infinite world of stories
Religion & Spirituality
இந்து மதம் பல பிரிவுகளைக் கொண்டது. விரிவான அதன் அமைப்பில் ஏராளமான சடங்குகள், சம்பிரதாயங்கள், கர்மங்கள், நம்பிக்கைகள், செய்முறைகள் ஆகியவை உண்டு. இந்துமதம் என்பதே ஒரு வாழ்க்கை முறைதான். ஆகையால் வாழ்க்கையை ஒட்டிய நடைமுறைகள் அதில் பல உண்டு. இவற்றைப் பற்றிய சந்தேகங்கள், விளக்கம் தேடும் நிலைகள், செய்முறைக்கான வழிகள், விளையக்கூடிய பலாபலன்கள் ஆகியவை நம்மில் பலருக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பொதுவாக இதில் தெளிவுபெற, பெரியவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வோம். சிலசமயம் சாஸ்திரம் சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்கள் சில கோட்பாடுகளை மட்டும் சொல்லுவார்கள். அன்றாட வாழ்க்கையில் இதை இன்னும் தெளிவாக விளக்கக்கூடிய, வழிகாட்டக்கூடிய ஞானியரின் அறிவுரை இருந்தால் நாம் கடைப்பிடிக்கும் நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், கர்மாக்கள், அவற்றின் பயன்கள் ஆகிய பலவற்றையும் நாம் தெரிந்து கொண்டு செய்யலாம். அதேபோல இன்றைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து தெளிவுபெற வழியும் கிடைக்கும். குறிப்பாக, இளைய தலைமுறையினர் இந்த விளக்கங்களை அறிவுபூர்வமாக, தத்துவபூர்வமாகப் பெறுவதையே விரும்புவார்கள்.
ஞானியரைத் தரிசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம். ஆனால் அவர்களிடம் விளக்கங்களைக் கேட்டுப் பெறுவது எப்படி? இந்தப் புனிதமான, தெளிவுதேடும் பணி ஞானியர்களைப் நாடிப் போய், ஞானமன்றம் நடத்தி, விடைகளைப் பெறும் வாய்ப்பு, எனக்கு 'ஞானபூமியில்' பணியாற்றியபோது கிடைத்தது. அந்த ஞான விளக்கங்களை இங்கே திரட்டி, தொகுத்து அளித்துள்ளேன். இதில் பல்வேறு ஞானியர், நம்முடைய ஐயங்களுக்கு, தமக்கே உரிய முறையில் விளக்கங்களை அளித்துள்ளார்கள்.
சுவாமி சின்மயானந்தர் கூறுவார்கள் -"இந்துமதம் ஒரு மாபெரும் அறிவுக் களஞ்சியம். அதில் ஆரம்பநிலை ஆசிரியர்களிலிருந்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரையில், வெவ்வேறு நிலையில் உள்ள ஞானமும், தெளிவும், பக்குவமும் கொண்டவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடையே நமக்கு யார் ஏற்றவராகப்படுகிறாரோ அவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்" என்று.
இங்கே ஞான மன்றங்களில் இடம் பெறும் விளக்கங்கள் அவ்வாறு அமைந்தவை. ஒரே கேள்விக்குப் பல்வேறு விதமான பதில்களைக் கூடக் காணலாம். அவரவருக்கு எது பொருந்துமோ, அதை ஏற்றுக் கொள்ளலாம். சுருங்கச் சொன்னால், ஒவ்வோர் இந்துவும், வீட்டில் வைத்துப் போற்றி, அன்றாடம் படித்தும் குறிப்புகளைத் தேர்ந்தும், பதில்களை நாடிப்பெற்றும், உயர்வடைய, தேவைப்படும் வழிகாட்டி இது. ஞானவழிக்கு உபாயம் தரும் தனிச்சிறப்புடைய வழிகாட்டி.
இத்தொகுப்பில் சுமார் நூற்று எண்பது ஞானியர்கள் முன்வந்து வழிகாட்டி இருக்கிறார்கள். இந்துமதத்தின் நடைமுறையை ஒட்டி, ஆன்மிக வழியில் அமைதியைக் காண விரும்பும் அன்பர்கள் இவற்றைப் படித்துப் பயன்பெற வேண்டும் இந்த முயற்சியின் முதற்பகுதியாக ஐம்பது அருளாளர்கள் கூறிய விளக்க உரைகள் இரண்டு பாகங்களாக வெளிவருகின்றன. மற்றவை அடுத்த முயற்சியாக வெளிவரும்.
Release date
Ebook: 5 February 2020
English
India