Step into an infinite world of stories
அண்ணன் நடராஜ் நின்றிருந்த தோரணையும் “யார்றி அவன்” என்று குரலை ஒருமாதிரி இழுத்துக் கேட்ட விதமும் சௌந்தர்யாவின் வயிற்றில் ஓர் அவஸ்தையான ரசாயன கலவையை ஏற்படுத்த கையில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரம் தானாய் நழுவியது. “டிங்...டிணார்” “அ... அண்ணா...” சௌந்தர்யாவின் பெரிய விழிகள் நட்ராஜ் முகத்திலேயே திகைத்து நின்றது. நெற்றியிலும் மேலுதட்டிலும் அவசர அவசரமாய் அரும்பிவிட்ட வியர்வைச்சுரங்கள் வழிய நேரம் பார்த்தன. “அவன் யார்னு கேட்டேன்” “வ... வந்து... வந்து...” பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்த சிவசாமி சௌந்தர்யாவின் நிலைமையைப் பார்த்ததும் முகம் மாறினார். “டேய் என்னடா நடந்தது?” அப்பாவைப் பொருட்படுத்தவில்லை. நடராஜ் வாயில் இருந்த டூத் பேஸ்ட் நுரையை சமையலறை ஜன்னல் வெளியே தோட்டத்து செடிகள் மீது உமிழ்ந்துவிட்டு சௌந்தர்யாவின் பக்கம் கண்கள் சிவக்க திரும்பினான். “யாரவன்?” எச்சில் விழுங்கினாள். “காதலிக்கிறியா?” “ஆ... ஆமா...” சொல்லி முடிப்பதற்குள் உடம்பு பூராவும் சில்லிட்டுப் போன மாதிரியான உணர்வு. “எத்தனை நாளா?“மூ... மூணு மாசமா” “அவன் பேர் என்ன?” “வ... வருண்” “என்ன ஜாதி” “ந... நம்ம ஜாதிதான்” ‘என்ன அண்ணன் இவ்வளவு நிதானமாய் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று சௌந்தர்யா நினைத்த வினாடி - நடராஜ் கத்தினான். “ரோகிணி என் பெல்ட்டைக் கொஞ்சம் எடுத்துட்டு வா” அந்தக் கத்தலுக்காகவே காத்திருந்த ரோகிணி சமையலறைக்குள் நுழைந்தாள். கையில் பாம்பு சட்டை உரித்த மாதிரியான பெல்ட். சிவசாமி பதறிப்போய் நடராஜின் தோளைப் பற்றினார். “டேய்...” “அப்பா இவளை காலேஜுக்கு அனுப்பக்கூடாதுன்னு நான் முடிவு பண்ணினப்ப நீங்க என்ன சொன்னீங்க? சௌந்தர்யா படிக்க ரொம்ப ஆசைப்படறா, படிக்க வையேன்டான்னு சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டு காலேஜுக்கு அனுப்பினேன். இப்ப இவ என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கா தெரியுமாப்பா? இவபடிக்க ஆசைப்படலை. காதலிக்க ஆசைப்பட்டிருக்கா. ஆம்பிளை சுகத்துக்காக...” “டேய் நிறுத்துடா... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு போகாதே. இந்த வயசுல இதெல்லாம் சகஜம். அந்தப் பையன் யாரு. என்னன்னு விசாரிப்போம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த குடும்பமாய் இருந்தா...” “சம்பந்தம் பேசலாம்னு சொல்றீங்களா?” “ஆமா! சௌந்தர்யா சொல்லிட்டா. பையன் ஜாதி பிரச்சினை ஓவர். வேற ஏதாவது பிரச்சனைகள் இருக்கான்னு பார்த்துட்டு...” ரோகிணி குறுக்கிட்டாள்.
© 2024 Pocket Books (Ebook): 6610000508570
Release date
Ebook: 16 January 2024
Tags
English
India