Step into an infinite world of stories
Classics
புலி வருகிறது
“புலி வருகிறது, புலி வருகிறது”- என்று புலி வந்தே விட்டது.
இதோ என் நாவலை உங்கள் எதிரே வைக்கிறேன்.
புலி என்றதும் நான் சின்ன வயதில் கேட்ட கதையொன்று ஞாபகம் வருகிறது.
பகவான் அப்பரை ஆட்கொண்ட விதம் எப்படித் தெரியுமா? காடு, மலை, வனாந்திரம், கல், மண், வெய்யிலின் பொடிமணல், முள், செடி எல்லாம் நடந்து நடந்து, கை கால் உடல் தேய்ந்து அப்பவும் ஆர்வம் குறையாது உடலால் உருண்டு உருண்டு அப்பர் கைலையை நாடி வருகையில் கடவுள் புலியுருவம் எடுத்து, அப்பரை அடித்துக்கொன்று தின்றுவிட்டாராம். ஆண்டவனுக்கு அப்பன் மேல் அவ்வளவு ஆசை; அப்பனின் ருசி அப்படிப்பட்டது; அது தூண்டிவிட்ட பசி தாளாது, அந்த ருசிக்கு ஏங்கி, கடவுள் தவித்தாராம்.
அவனன்றி ஓரணுவும் அசையாது.
ஆனால் அவன் நம்மில் இசைந்து கொண்டிருக்கிறான்.
அவன் எவனோ? புலியோ? அதன் ஓயாத பசியோ, ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
அதனால் இந்தப் பசியிருக்கும் வரை, அவனுக்கும் நமக்கும் அழிவில்லை.
உணர்ச்சிகளைத் தனித்துப் பார்க்கையில், ஆசைகள், குரோதங்கள், கோபங்கள், சாபங்கள், நிறைவுகள், பங்கங்கள், சஞ்சலங்கள் அமைதிகள் எனப் பல கோணங்கள் தென்பட்டாலும், உண்மையில் அவை லோகஸ்ருதியின் இடையறா, முடிவிலா இயக்கத்திலும், அதனின்று தோன்றித் தெரிந்து, திரும்ப அதிலேயே மூழ்கிவிடும் அதனுடைய பிம்பங்களே.
இது வெறும் கதையாக மட்டும் கருதப்படாமல், இதில் எங்கேனும் ஒரு இடத்தில் தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய், படிப்பவர் நெஞ்சை ஒரு தருணமேனும் இது மீட்டிவிட்டால், என் ஆசை வீண் போகாது.
நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையை சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர் விட்டு, விஷயம் மெருகேறி, பிறகு, நம் ரத்தத்தில் தோய்ந்து நம் மனதையும் மாண்பையம் ஊட்டி வளர்க்கும் காவியமாகி விடுகிறது.
நிகழ்ச்சியின் கிளர்ச்சி அடங்கி ஓய்ந்த பிறகு, பின்னோக்கிலேனும் வாழ்க்கையைக் காவியமாகப் பார்க்க நமக்கு வக்கு இல்லாமற் போனால், நாம் வாழவே தகுதியற்றவர்கள்; மன்னிப்பவனே மன்னிக்கப்படுவான்.
இதைத்தான் இந்நாவலில் நான் சொல்ல முற்பட்டிருக்கிறேன். இதுவரை நான் எழுதியதத்தனையும் இதையெழுதப் பழக்கிக் கொண்டதுதான்.
இந்நாவலின் பிற்பகுதி பின்வரும்; உயிரின் காவியம், இழுக்க இழுக்க ஓயாத பொற்சரடு.
ஆனால் எழுதுவது வேறு, எழுதியது அச்சாவது வேறு. எனக்காகவே நான் எழுதிக் கொண்டாலும், எழுதியது அச்சாவது பிறருக்குத்தான். எழுதுவதற்கு இலக்கணம் இல்லாவிட்டாலும், அல்லது பிறகு அமைந்தாலும், அச்சுக்கு இலக்கணம் உண்டு.
இதை எனக்குச் சொல்லாமலே செயலில் விளக்கியவர் ‘குண்டூசி’(P.R.S) கோபால். இம் மனுஷனுக்கு அச்சுப் பார்ப்பதில் உள்ள நீண்ட அனுபவ ஞானமும், எழுத்துக்கு எழுத்து - ஆம், நிச்சயமாய், அப்பட்ட உண்மையாய் - எழுத்துக்கு எழுத்து அவர் தனித்தனியாய்க் காட்டியிருக்கும் கவனமும், தந்திருக்கும் அன்பும், ஊட்டமும் வியப்பைப் பயக்கின்றது.
இப்புத்தகம் உருவாகிக் கொண்டிருக்கையில், என்னை நிர்வகிப்பதிலும், என் எழுத்தை நிர்வகிப்பதிலும் அவர் காட்டிய பொறுமை, நினைத்துப்பார்க்க அச்சமாயிருக்கிறது. அவ்வப்போது என்னின்று எழும் என் எழுத்தின் செருக்கிற்குக் கடிவாளம் கட்டி, பொருள் சிதைவில்லாமல், முறையாய் நூல்வடிவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் சாதனை அவருடையதுதான்.
காரியவாதி.
புலி என்னபை புசித்துவிட்டு உங்களிடம் வந்திருக்கிறது. நீங்கள் அதன் பசியைத்தான் தீர்ப்பீர்களோ, அதன் வாலை முறுக்கி அதன் மேலேறி சவாரிதான் செய்வீர்களோ, உங்கள் இஷ்டம்; உங்கள் சாமர்த்தியம்.
நான் புலியின் வயிற்றுள்ளிருந்து பார்த்துக் கொண்டு இருப்பேன்.
Release date
Ebook: 5 February 2020
English
India