Step into an infinite world of stories
Fiction
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ‘மங்கையர் மலர்' இதழின் நிர்வாக ஆசிரியர் லக்ஷ்மி நடராஜன் கேட்டார். “அமரர் கல்கி படைத்த பெண் பாத்திரங்களைப்பற்றி 'மங்கையர் மலர்' வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறமாதிரி எழுதுகிறீர்களா?"
'கரும்பு தின்னக் கூலியா?' என்பதுபோல் எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள சம்மதித்தேன். 2011 டிசம்பர் இதழில் தொடங்கி இந்தக் கட்டுரைகள் மங்கையர் மலரில் இடம்பெற்றன. கல்கி, மங்கையர் மலர் இதழ்கள் புதிய வடிவம் பெற்றபோது, மங்கையர் மலரோடு வழங்கப்படுகிற இணைப்பில் 'அமரதாராவின் இந்துமதி' போன்ற சில கட்டுரைகள் வெளியாயின.
அமரர் கல்கியின் பிரபலமான பாத்திரங்களான நந்தினி, பூங்குழலி போன்றவைகளைப் பற்றி எழுதாமல் அதிகம் அறியப்படாத பாத்திரங்களைப் பற்றி எழுதலாம் என்றே முதலில் விரும்பினேன். 2014 மங்கையர் மலர் ஆண்டு விழாவின்போது 'கல்கியின் பெண் பாத்திரங்கள்' என்ற தலைப்பிலேயே மாறுவேடப் போட்டி அறிவிக்கப்பட்டபோது, செம்பியன்மாதேவி, பூங்குழலி போன்ற பாத்திரங்களைப் பற்றியும் புதிதாக எழுதத் தோன்றியது.
ஏற்கெனவே மங்கையர் மலர் இதழில் வெளிவந்த கட்டுரைகளோடு புதிய கட்டுரைகளையும் சேர்த்து இந்தத் தொகுப்பில் வெளியிடுகிறேன்.
'மங்கையர் மலரில்’ கட்டுரைகள் வெளியான போது, கதைகள் முதலில் வெளியான காலத்தில் இடம் பெற்ற ஓவியர்களின் சித்திரங்களையே வெளியிட்டார்கள். அவற்றுள் சிலவற்றை நன்றியோடு இத்தொகுப்பில் சேர்த்துள்ளோம்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் பழைய சித்திரங்களைச் சேர்க்க முடியாத நிலையில், இத்தொகுப்புக்காகவே சில சித்திரங்களை ஓவியர் வேதாவை வரையச் செய்து சேர்த்துள்ளோம்.
இருபத்தோரு கட்டுரைகள் மட்டுமே இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. இன்னும் இதே அளவு அதற்கு மேலும் எழுதக்கூடிய அளவுக்கு அமரர் கல்கியின் அற்புதமான பாத்திரப் படைப்புக்கள் உள்ளன.
அதற்கான வாய்ப்பும், கால அவகாசமும் கிடைப்பதைப் பொருத்து, இந்த நூலின் அடுத்த பதிப்பில் அவற்றைச் சேர்க்க முடியும் என நம்புகிறேன்.
இந்தப் பெண் பாத்திரங்களைப் பற்றிய கட்டுரைகள் புதிய வாசகர்களுக்கு அறிமுகம் என்பதாகவே அமையும். இவற்றின் துணை கொண்டு இந்தக் கதைகளை முழுமையாகப் படித்துப் பயன் பெற வேண்டும் என வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பெரும்பாலும் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் அமரர் கல்கி எழுதிய கதைகள் இவை. இன்னும் நூறு ஆண்டுகளானாலும் கூட மாற முடியாத பிரச்னைகளையும் அமரர் கல்கி எழுதியிருக்கிறார். எதை எழுதினாலும் தேச நலனையும் சமுதாய நலனையும் கருத்தில் கொண்டே அவர் எழுதினார் என்பதை ஆழ்ந்து படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.
அன்புடன்
சுப்ர. பாலன்
Release date
Ebook: 18 May 2020
English
India