Step into an infinite world of stories
Fiction
வணக்கம். “நினைவுச் சாவியால் மனதைத் திறக்கிறேன்” என்ற இந்த நூலானது செங்கற்பட்டு நகர மக்களின் வாழ்க்கை 1970 முதல் 1978 வரை எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் ஒரு அனுபவப் பதிவாகும். ஒவ்வொருவருக்கும் தன் இளவயதில் நடைபெற்ற சம்பவங்கள் மனதில் ஆழப்பதிந்து போயிருக்கும். என் இளம் வயதில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பே இந்தநூலாகும். இதிலுள்ள பல சம்பவங்கள் உங்களில் பலருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு ஒத்துப்போகலாம். இதை நான் எழுதிய இந்த நினைவலைகளை வாட்ஸ்அப் மூலம் படித்து அவ்வப்போது தங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொண்ட பலரின் வார்த்தைகளிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன்.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 22 மார்ச் 2020 அன்று காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை இந்தியாவில் பதினான்கு மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 25 மார்ச் 2020 முதல் 31 மே 2020 வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தொடர்ந்தது. இத்தகைய காலகட்டத்தில் அரசின் உத்தரவை மதித்து வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் ஏற்பட்டது.
வீட்டில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது பழைய நினைவுகள் என் மனதில் திரைப்படம் போல ஓடத்தொடங்கின. எனக்கு மட்டும் அல்ல. என்னைப் போன்ற பலருக்கும் இது நிகழ்ந்தது. அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. என் சிறுவயதில் நான் செங்கற்பட்டில் வாழ்ந்த போது அந்த ஊரில் மக்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள், வாழ்ந்த வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான பழக்க வழக்கங்கள், பள்ளிக்கூட வாழ்க்கை இவற்றை தினமும் ஒரு தலைப்பில் எழுதினால் என்ன என்ற எனது எண்ணம் எழுத்தாக மாற்றம் பெறத் தொடங்கியது.
தினமும் ஒரு தலைப்பில் எனது இளம்வயது வாழ்க்கையினை எழுதி அதை பி.டி.எஃப் கோப்பாக மாற்றி என் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தேன். நாளடைவில் பல நண்பர்கள் எனது கட்டுரையினை ரசித்துப் படிக்க ஆரம்பித்தார்கள். உடனுக்குடன் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். சில நாட்கள் கட்டுரை அனுப்பாமல் போனால் உடனே வாட்ஸ்அப்பில் இன்றைய நினைவலைகள் ஏன் அனுப்பவில்லை என்று கேட்கத் தொடங்கினார்கள். இதில் உள்ள நிகழ்ச்சிகள் அவர்களுடைய வாழ்க்கையோடு ஒத்துப் போனதன் விளைவே இந்த கேள்வி என்பதை நான் புரிந்து கொண்டேன்.
குமுதம் பக்தி ஸ்பெஷல் துணை ஆசிரியர் திரு.மு.வெங்கடேசன் அடிக்கடி என்னை தொலைபேசியில் அழைத்து நினைவலைகளை சிலாகித்துப் பேசுவார். எனது இனிய நண்பர் புதுவை எழுத்தாளர் திரு.குமாரகிருஷ்ணன் அவர்கள் இவற்றை உடனுக்குடன் படித்து பாராட்டி மகிழ்வார். இவர் இவற்றைத் தொகுத்து நூலாகக் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தார். எழுத்தாளர் திருமதி.வெ.இன்சுவை அவர்கள் வாட்ஸ்அப்பில் அவ்வப்போது பாராட்டுச் செய்திகளை அனுப்பி என்னை உற்சாகப்படுத்தினார். கிரேட்லேக்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் திரு.பச்சையப்பன், பாவினியில் பணிபுரியும் பொறியாளர் திரு.நரசிம்மன், எனது கல்லூரித் தோழன் மதுராந்தகம் திரு.ஜவஹர்மணி முதலான நண்பர்கள் எனது நினைவலைகளை மிகவும் ரசித்துப் படித்துப் பாராட்டியவர்களில் முக்கியமானவர்கள்.
இந்த நூலினை 06 ஏப்ரல் 2020 அன்று எழுதத்தொடங்கி 20 மே 2020 அன்று ஐம்பது அத்தியாயங்களில் முடித்தேன். ஒருசில நாட்களில் இரண்டு நினைவலைகளைக் கூட எழுதினேன்.
நாங்கள் 1978 முதல் 1981 வரை காஞ்சிபுரத்தில் வசிக்க நேர்ந்தது. அவ்வப்போது எங்கள் உறவினர்களைச் சந்திக்க செங்கற்பட்டிற்கும் வந்து சென்றோம். எனவே இந்த நூலில் ஆங்காங்கே காஞ்சிபுர வாழ்க்கையையும் சிறிது பதிவு செய்துள்ளேன்.
இப்படி விளையாட்டாக எழுதத் தொடங்கிய என் சிறுவயது நிகழ்ச்சிகளே இப்போது உங்கள் கைகளில் “நினைவுச் சாவியால் மனதைத் திறக்கிறேன்” என்ற தலைப்பில் மின்னூலாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதைச் சிறந்த முறையில் மின் நூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்தின் உரிமையாளர் திரு.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் இனிய நன்றி.
உங்கள் இனிய
ஆர்.வி.பதி
Release date
Ebook: 11 January 2021
English
India