Step into an infinite world of stories
Fantasy & SciFi
சாப்பிட்டு முடித்து... தயாளன் சென்னைக்குப் புறப்பட்டுப் போனதும் சுப்ரியா மனம் கலங்கினாள். “நீ ஒழுங்காய் இருந்திருந்தால்... நானும் ஒழுங்காய் இருப்பேனே டாடி! இப்படி வீடு வீடா என்னை விட்டு... எதை மாத்தப்போறே?” இந்த சின்ன வீட்டிற்குள் எவ்வளவு நேரம் தான் இருப்பது? போரடித்தது அவளுக்கு! மூன்று பெட்ரூம், ஒரு ஹால், பூஜையறை, கிச்சன், பாத்ரூம் வகையறாவுடன் மொட்டை மாடி! அவ்வளவதான்! இந்த வீட்டின் மொத்தமும், சென்னையில் உள்ள அவள் வீட்டின் ஹாலில் அடங்கி விடும். அவளுக்கென்று ரோமா தன் அறையை ஒதுக்கித் தந்திருந்தாள். சுப்ரியா முகம் சுளித்தாள். “இதுவா... இதிலேயா நான் தங்கணும்? எங்க வீட்டு பாத்ரூம் அளவுக்குதான் இருக்கு?” ரோமா சங்கடமாய் நெளிந்தாள். “எனக்கு இது அதிகம். ஆனா, உனக்கு பத்தாது தான்!” “பக்கத்து ரூம் கொஞ்சம் பெரிசாயிருக்கே? அங்கே ஷிப்ட் பண்ணு!” “அ... அது... எங்க ஆதி அண்ணாவோடது சுப்ரியா.” “இருக்கட்டுமே... ஸோ வாட்?” “அ... அண்ணனுக்கு தான் வச்சப் பொருள் வச்ச இடத்துல இல்லைன்னா கோபம் வரும். ப்ளீஸ்... அட்ஜஸ்ட் பண்ணிக்க.” “ஏஸியெல்லாம் இல்லையா? அட சீலிங் ஃபேன் கூட இல்லாம எப்படி உயிர் வாழறே ரோமா?”அவளின் பேச்சில் தொனித்த ஏளனமும், கிண்டலும் அவர்களின் வசதியின்மையை சுட்டிக்காட்டுவதை நன்றாகவே உணர்ந்தாலும் ரோமாவிற்கு அவள் மீது கோபமே வரவில்லை. “இது உங்க ஊரு மாதிரி ஹாட் இல்லை சுப்ரியா! வெலிங்டன். ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கிற ஊரு. அதோ டேபிள் ஃபேன் இருக்கு. ஆனா, ஈவினிங்ல இந்த ஜன்னலை மூட மறந்துட்டியோ... பனிப்புகை உள்ளே நுழைஞ்சு உன்னை உறைய வச்சிடும். பி கேர்ஃபுல்!”. “ரியல்லி? ஜன்னல் வழியா பனிப்புகை உள்ளேயே வந்துடுமா? சில்லுன்னு இருக்குமா? என்னை அப்படியே... கவர் பண்ணிக்குமா? த்ரில்ங்கா இல்லே?” விழிகள் விரிய ஆர்வமாய் கேட்ட போது... ரோமாவிற்கு சிரிப்புதான் வந்தது. “ஏன் சிரிக்கிறே?” “ரொம்ப சாதாரண விஷயம் தான் இது? ஆனா அதைக் கூட தெரிஞ்சுக்காம... இத்தனை வருஷமா சென்னையிலே மாசுப்பட்ட புகையிலேயே வாழ்ந்திருக்கியே...” “‘வாட்... டு... டூ? இப்படியொரு அத்தை இருக்காங்கன்றதே எனக்கு இப்ப தானே தெரியும்?” “சென்னையை தவிர எங்கேயும் போனதில்லையா?” “பாண்டிச்சேரி, மகாபலிபுரம் தவிர, ரெண்டு முறை கனடாவுக்கும், சிங்கப்பூர், மலேஷியாவுக்கும் ஃப்ரண்ஸோட ஜாலி டூர் போயிருக்கேன். தட்ஸால்!” பேசிக்கொண்டே தன் லெதர் பேக்கிலிருந்து ஷாம்பூ, ஸ்ப்ரே, மாய்ச்ரைஸர் போன்ற பொருட்களை எடுத்து டேபிள் மீது வைத்தாள். ரோமா பெட் கவரை மாற்றிக் கொண்டே அவளை ரசித்தாள். மூங்கில் போன்ற தேகம். பள பள சருமம். மாசு மருவில்லாத முகம். உறுத்தாத நிறத்தில் லிப்ஸ்டிக். ஒரே சீராக வெட்டப்பட்ட தோள் தாண்டி புரண்ட கூந்தலுக்கு... அங்கங்கே விட்டு விட்டு தங்க நிறம் பூசியிருந்தாள். முழங்கால் வரை கவ்விப் பிடித்திருந்த பேண்ட்... அவளின் வழுவழுப்பபான கால்களை காட்டியது. டைட்பனியன் அவளின் அளவான அளவை சொல்லியது. மொத்தத்தில் சுப்ரியா அதிரடியான நாகரீகப் பட்டாசு. “உங்கண்ணே எங்கே?” “பெங்களூரில் வொர்க் பண்றார்!” “ஓஹோ... எங்கே... அவரோட போட்டோவையேக் காணோம்” “அதோ... ஹால்ல மாட்டியிருக்கே?” “அதுவா... ஏய்... அது பாரதியார் இல்லே?” “போச்சு... எங்கண்ணன்தான் அது! பாரதியார்னா ரொம்பப்பிடிக்கும். அதனால் அவரை மாதிரி வேஷம் போட்டு போட்டோ எடுத்துக்கிட்டாரு!” அருகில் சென்று உற்றுப் பார்த்தவளுக்கு வித்தியாசம் புரிந்தது.
© 2024 Pocket Books (Ebook): 6610000510757
Release date
Ebook: 13 January 2024
English
India