Step into an infinite world of stories
Fantasy & SciFi
தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன. பூரணி ஹாலின் மூலையில் செருப்பை கழற்றி வைக்கப் போன போதுதான் கவனித்தாள் அங்கு இன்னொரு ஜோடி செருப்பிருந்தது. பூரணி கண்கள் சுருக்கி யோசனையோடு உள்ளே நுழைந்தபோது தெரிந்து போனது. விஜயலட்சுமி வந்திருந்தாள். சிவக்குமாரின் அம்மா! விசாலாட்சி எதையோ சொல்லி சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள். விமலா அவர்கள் முன் தட்டில் சாப்பிட போண்டாவும் காபியும் கொண்டு வந்து வைத்தாள். முதலில் விஜயலட்சுமிதான் பூரணியைப் பார்த்தாள். “வாம்மா... பூரணி!” என்று வாஞ்சையோடு அழைத்தாள். பூரணி தலைகுனிந்தபடி ஏதும் பேசாமல் அவர்களைத் தாண்டி செல்ல முற்பட்டபோது விஜயலட்சுமி அவள் கையைப் பற்றினாள். “உக்காரு பூரணி!” வேறு வழியின்றி அமர்ந்தாள். “உன்னைப் பார்க்கறதுக்காக... ஒரு மணி நேரமா காத்துக்கிட்டிருக்காங்க உங்க அத்தை! ஏம்மா லேட்டு?” என்றாள் விசாலாட்சி. அம்மாவை ஒரு கணம் முறைத்தவள் விஜயலட்சுமி பக்கம் பார்வையைத் திருப்பினாள். “என்ன விஷயம்?” பூரணி பளிச்சென்று கேட்கவும் அந்தம்மாள் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள். “ஒண்ணுமில்லேம்மா! உன்னைப் பார்க்கறதுக்கு ஏதாவது காரணத்தை தூக்கிட்டு வரணுமா? உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு! அதோட... சிவக்குமார். வேலை விஷயமா கேரளா போய் வந்தான். உனக்குநேந்திரங்காய் சிப்ஸ் பிடிக்கும்னு உங்கண்ணன் மூலமா தெரிஞ்சு வச்சிக்கிட்டு... உனக்காக வாங்கிட்டு வந்தான். இந்தா பூரணி” என்றபடி ஒரு கிலோ பாக்கெட்டை அவளிடம் நீட்டினாள். பூரணி அதை வாங்காமல் வெறித்துப் பார்த்தாள். “வாங்கிக்க பூரணி!” என்றாள் விசாலாட்சி. மௌனமாய் வாங்கிக் கொண்டாள். “எங்க வீட்டுக்கு நீ சீக்கிரம் வரணும் பூரணி எனக்கு சிவக்குமார் ஒரே பையன்தான்! அவனும் ஆபீஸ்க்கு போயிடறான் நான் தனியா வீட்லே இருக்க வேண்டியிருக்கு. நீ வந்த பிறகு தான் அந்த வீடு கலகலன்னு இருக்கும்!” ‘இருக்கும்... இருக்கும்.’ என்றெண்ணிக் கொண்டாள் பூரணி. “சம்பந்தியம்மா... முதல்ல போண்டா சாப்பிடுங்க. ஆறிப் போகுது!” என்றாள் விசாலாட்சி. “பூரணி... நீயும் சேர்ந்து சாப்பிடேன்!” “இல்லே... வேண்டாம். ஆபீஸ் கேன்ட்டீன்ல சாப்பிட்டுட்டுதான் வந்தேன் நான் முகம் கழுவணும்!” என்றபடி எழுந்து விட்டாள். “கேன்ட்டீன்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே பூரணி” விஜயலட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து சென்று விட்டாள். விசாலாட்சிக்கே என்னமோப் போலாகி விட்டது. “தப்பா நினைச்சுக்காதீங்க! அவ குழந்தை மாதிரி. அவ யதார்த்தமாதான்...” “அடடா... எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு? நான் தப்பா நினைச்சுக்கலியே நானும் பொண்ணுதானே? அவமனசை என்னால் புரிஞ்சுக்க முடியுது. பள்ளமாகிப்போன இதயத்துல அன்பால பூசி மெழுகிடுவேன். அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. அவ புரிஞ்சுக்கறதுக்கு பழகிக்கறதுக்கு கொஞ்ச நாளாகும்அது எல்லா பொண்ணுங்களுக்கும் உள்ள ஆரம்ப பிரச்சனைதானே? நீங்க இந்த விஷயத்தை பெரிசுபடுத்தறதுதான் எனக்குப் பிடிக்கலே!” விசாலாட்சியின் கண்கள் கண்ணீரில் தளும்பின. “என் பொண்ணை இப்படி நடுக்கடல்ல தள்ளிவிட்டுட்டியேன்னு கடவுளை தினந்தோறும் பழி சொல்லி சண்டை போட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, அந்த கடவுளே இப்ப உங்க ரூபத்துலே வந்திருக்கு. என் பொண்ணை கடவுள் கைவிடலே! அவ செஞ்ச புண்ணியம் நீங்க அவளுக்கு மாமியாரா கிடைச்சிருக்கீங்க!” “சேச்சே... என்னைப் போய் கடவுள், கடவுள்னு. விமலா! போண்டா நீயா செஞ்சே? அருமையா மெது மெதுன்னு இருக்கு. இன்னொன்னு சாப்பிடணும்ணு ஆசையா தான் இருக்கு. ஆனா, என் பேரப்பிள்ளைகளையெல்லாம் கொஞ்சறதுக்கு கடவுள் எனக்கு ஆயுளைத் தரணும். இதை அதிகமா சாப்பிட்டா எனக்கு மூச்சிரைக்கும்!” சிரித்தபடி சொன்னாள். “ஏம்மா அப்படி சொல்றீங்க? உங்க பேரப்பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி அதுங்களும் குழந்தைங்க பெத்துக்கறதையும் பார்க்கத்தான் போறீங்க!” என்றாள் விமலா. “என்னம்மா... நல்லாருக்கீங்களா?” என்ற குரல் கேட்டு மூவரும் வாசல் பக்கம் திரும்பினர். அன்னம்மாள் நின்றிருந்தாள். அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவளை எதிர்பார்க்கவில்லை விசாலாட்சி. “வா... வாங்க” என்றாள். “பூரணி எங்கே? ஆபீஸ்லேர்ந்து வந்துட்டாளா?” அன்னம்மாளின் கண்கள் பூரணியைத் தேடியது. விஜயலட்சுமி புருவம் சுருக்கி வந்த பெண்மணியைப் பார்த்தாள். விசாலாட்சி மரியாதை நிமித்தமாக அவர்களை அறிமுகப்படுத்தியாக வேண்டிய கட்டாயம். “இவங்க... பூரணியோட மாமியார்!” என்றாள் விஜயலட்சுமியிடம். “வணக்கம்மா!” என்று கைகூப்பினாள்வணக்கம்! நீங்க?” என்றாள் அன்னம்மாள்.
© 2024 Pocket Books (Ebook): 6610000510726
Release date
Ebook: 13 January 2024
English
India