Step into an infinite world of stories
Fantasy & SciFi
துர்கா ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பும் போது மாடி பால்கனியருகே இவள் வரவிற்காக காத்திருந்த வைத்தீஸ்வரன் கண்களில் பட்டார். இவளைக் கண்டதும் கதிரவனாய் முகம் பிரகாசிக்க கையை அசைத்துகாட்டி கீழே இறங்கி வந்தார். துர்கா நிதானமாய் நடந்தாள். அவள் செருப்புக்கடியில் மெத்தென்று வளர்ந்திருந்த பசும்புற்கள் நசுங்கிப்போயின. கண்ணுக்கெட்டிய வரை அழகிய செடி, கொடிகள், மலர்கள் என்று அந்த இடமே நந்தவனமாய் இருந்தது. கேட்டை திறந்து உள்ளே சென்றால் ஐம்பதடி தள்ளி வெண்ணிறமாய் பளபளத்தது அந்த சலவைக்கல் பங்களா! மூன்று மாடிகளாய் உயர்ந்து கம்பீரமாய் நின்றிருந்தது? “வா... துர்கா... இன்னைக்கென்ன இவ்வளவு லேட்?” ஒரு குழந்தையின் துள்ளலோடு, ஆர்வத்தோடு, லேசாய் மூச்சு வாங்க வாசலில் வந்து விட்டார். “நான் தான் வந்துட்டேயிருக்கேனே... நீங்க ஏன் இப்படி ஓடி வர்றீங்க? மூச்சு வாங்குது...” “அதைவிடு! ஏன் லேட்? நான் பதறிப்போய்ட்டேன். உங்கிட்டயிருந்து போனும் வரலே... நான் என்னன்னு நினைக்கிறது?” கவலையாய் கேட்டார். “அது சரி! ஒரு மணி நேரம்தானே லேட்டாச்சி. முகேஷ்க்கு இன்னைக்குப் பிறந்த நாள். கோவிலுக்குப்போய் அர்ச்சனைப் பண்ணிட்டு வந்தேன்! அதனாலதான் தாமதம்!” “அடடா... நேத்தே எங்கிட்டே சொல்லி இருக்கலாமே! ஒரு நல்ல ப்ரெசன்ட்டை ரெடி பண்ணியிருப்பேனே! இப்ப மட்டும் என்ன... அப்படி ஒண்ணும் நாழியாயிடலை. இன்னைக்கு சமைக்க வேண்டாம். ஹோட்டல்லசாப்பிட்டுப்போம். முகேஷிற்கு பர்த்டே கிஃப்ட் வாங்க... இன்னைக்கு முழுக்க மெட்ராஸை ஒரு கலக்கு கலக்குவோம்!” துர்கா சப்தம் வெளிவராமல் சிரித்தாள். “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் வைத்தி.” “என்ன வேண்டாம்? நோ... நோ...உன் பேச்சை நான் கேக்கப் போறதில்லே! இன்னைக்கு உன் கூடவே நானும் கிளம்பி முகேஷிற்கு என் கையால பரிசை கொடுக்கப் போறேன்!” கண்கள் மின்ன... உறுதியாய் பேசினார்.” ‘வேற வினையே வேண்டாம்!’ என்று நினைத்த துர்கா சங்கடமாய் சிரித்தாள். “உள்ளே போய் பேசலாமா?” “சேச்சே... நான் ஒரு மடையன், தாராளமா உள்ளே வா...துர்கா!” என்ற வைத்தீஸ்வரன் நாற்பத்தெட்டு வயதிற்கு ரொம்பவே தளர்ந்திருந்தார். செக்கச்சிவந்த நிறம். ஐந்தரை அடி உயரம். லேசாய் தொந்தி! அங்கிங்கே என்று தலையில் வெள்ளிக் கம்பிகள் தெரிந்தாலும், வழுக்கை விழவில்லை. வெள்ளை நிறத்தில் வேட்டியும், சட்டையும் ஒரு கையில் தங்க கைகடிகாரம். மற்றொரு கையில் பிரேஸ்லெட். கழுத்தில் நவரத்தின மாலை நெற்றியில் விபூதிபட்டை. அந்த பங்களாவின் ஒவ்வொரு அடியும் பணத்தால் அளக்கப்பட்டிருந்தது. தேக்கில் இழைக்கப்பட்ட வேலைப்பாடுடன் கூடிய உயர்ரக பர்னிச்சர்கள் குஷன்வைத்து அமைக்கப்பட்டிருந்தது. வண்ண அலங்கார விளக்குகள், எடுபிடி வேலையாட்கள், தோட்டக்காரன், வாட்ச்மேன் என்று வீடு நிறைய பணியாட்கள் இருந்த போதிலும் கடந்த ஒரு வருடமாய் வைத்தீஸ்வரனுக்கு சமையல்காரி துர்காதான். சென்னை நகரின் முக்கிய புள்ளிகளில் ஒருவர் வைத்தீஸ்வரன். எல்லா பிஸினஸிலும் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி, மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளிக் கொள்பவர். அவர் இலட்சாதிபதி அல்ல. கோடீஸ்வரன். இருவரும் உள்ளே வந்தமர்ந்த மறுவினாடியே அவர் கம்பெனி ஜி.எம். துரைராஜ் வந்தார். “குட்மார்னிங் சார்!குட்மார்னிங்! உக்காருங்க துரை.” சீட்டின் நுனியில் பட்டும் படாமல் அமர்ந்தார். “சார்...” “சொல்லுங்க! என்ன விஷயம்? அதுக்கு முன்னால காபி சாப்பிடுங்க!” என்று கூறிவிட்டு வேலைக்காரனிடம் கண்களால் உத்தரவு போட்டார்
© 2024 Pocket Books (Ebook): 6610000510672
Release date
Ebook: 13 January 2024
English
India