Step into an infinite world of stories
Fantasy & SciFi
அம்மா... நான் கோவிலுக்குப் போய்ட்டு வர்றேன்... அப்பா... வர்றேன்ப்பா!” “போய் வாம்மா!” பட்டாபிராமன் மகளை வழியனுப்பி வைத்துவிட்டு சேரில் வந்தமர்ந்தார். கூந்தல் இடை தாண்டி சதிராட நடந்து சென்ற மகளையே பெருமையுடன் பார்த்தார். கூடத்தில் அமர்ந்தபடி தெருக்கோடி வரை பார்க்கலாம். அப்படியொரு காற்றோட்டமான பெரிய வீடு! ‘சித்ரா... எப்படி வளர்ந்துவிட்டாள்? செண்பகம் நேற்றுதான் பிரசவித்ததுப் போலிருந்தது. அதற்குள் என் மகளுக்கு பதினெட்டு வயதாகிவிட்டதா? என் செல்ல மகளை நல்ல வசதியான இடமாய் பார்த்து கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். இப்பவிருந்தே வரன் பார்க்க ஆரம்பித்துவிடவேண்டும்’ பட்டாபிராமன் அந்த ஊரின் பெரிய மனிதர்களில் ஒருவர். அந்த காயல்பட்டணத்தில் ஏழெட்டு வீடுகள், நிலபுலன்கள் இருந்தது. வசதிக்கு குறைச்சலில்லை. விவசாயம்தான் அவரது தொழில். சித்ரா நன்றாகப் படிக்க கூடியவள். பள்ளியில் எல்லாப் பாடத்திலும் அவள்தான் முதலாவதாய் வருவாள். +2 வரை படித்தவள் மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டாள். சுற்று வட்டாரத்தில் எந்த கல்லூரியும் இல்லை. வெளியூரில் ஹாஸ்டலில் தங்கியிருந்துதான் படித்தாகவேண்டும். மூன்று வருடம் மகளை பிரிந்திருக்க இரண்டு பேருமே சம்மதிக்கவில்லை. வேறு வழியின்றி சித்ராவும் அடம்பிடிக்காமல் பெற்றோரின் அன்புக்கு அடிபணிந்து அவர்களையே சுற்றி சுற்றி வந்தாள். செண்பகம் காபியுடன் கணவரின் அருகில் வந்தாள். “இந்தாங்க...” பட்டாபிராமன் காபி டம்ளரை வாங்கிக் கொண்டார்இந்த சித்ரா... நான் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேக்கவே மாட்டேங்கிறா... காலையிலே எந்திரிச்சி... வாசல் தெளிச்சு, கோலம் போடறா! அதானே! இதே டயலாக்கை தினசரி நீயும்தான் சளைக்காம சொல்றே! அவளும் சளைக்காம கோலம் போடத்தான் செய்யறா! அதைதானே சொல்ல வர்றே?” “ம்...” “செய்துட்டுப் போகட்டுமே செண்பகம்! அதையேன் தடுக்கறே? இன்னொரு வீட்டுக்கு வாழப்போகிறப் பொண்ணு... எல்லா வேலையும் செய்ய பழகிட்டாதான் நல்லது. அவளுக்கு சமைக்கவும் கத்துக்கொடுக்க ஆரம்பி!” “என்னங்க சொல்றீங்க நீங்க? நம்ம சித்ரா சமைக்கறதா? இதோப் பாருங்க... அவ வாழப்போகிற இடத்திலேயும் மகாராணி மாதிரி வாழணும். அவ சிட்டிகை போட்டா ஏழெட்டு வேலைக்காரங்க வந்து கை கட்டி நிக்கணும். அப்பேர்ப்பட்ட இடத்திலேதான் என் பொண்ணை கட்டிக்கொடுக்கணும்!” “அதுசரி...” என்று கூறிவிட்டு வாய்விட்டு பலமாக சிரித்தார். “நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கறீங்க?” முகம் சுருங்கிப் போயிற்று செண்பகத்திற்கு. “கோவிச்சுக்காதே செண்பகம். ஊருக்கே ராணியானாலும் ஒரு பொண்ணுங்கறவ புருஷனுக்கு பொண்டாட்டிதானே? பொண்டாட்டி கையால சமைச்சி சாப்பிடதானே ஒவ்வொரு புருஷனும் ஆசைப்படுவான்? நம்ம வசதிக்கு சமைக்கறதுக்கு தனி ஆளேப் போட்டுக்கலாம். ஏன் போட்டுக்கலே? அதிலே எனக்கும் விருப்பமில்லே. உனக்கும் விருப்பமில்லே. இதெல்லாம் ஒரு தனி சுகம் செண்பகம். எல்லா ஆம்பிளைகளும் பொண்டாட்டிகிட்டே படுக்கை விஷயத்துக்கு அடுத்து எதிர்பார்க்கறது சமையல்ல கெட்டிக்காரியா இருக்காளான்னுதான் நீ என்னடான்னா சித்ராவை அலுங்காம, நலுங்காம ஒரு பொம்மை மாதிரி அனுப்பி வைக்கலாம்னு பார்க்கறியா? நமக்கு ஒரு பிள்ளை இருந்து... இப்படி ஒரு பொம்மையா மருமகள் வந்தா... நீ அனுசரிச்சு நடந்துப்பியா?” “.....என்ன பேச்சைக்காணோம்? ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆயிரம் இருக்கலாம். ஆனா, யதார்த்த வாழ்க்கை என்று வரும்போது... அத்தனையும் அடிபட்டுப்போயிடும். சித்ராவுக்கு சமைக்க சொல்லிக்கொடு? அந்த காலத்துல முறத்தால புலியை விரட்டினாளாம். வீரத்தமிழச்சி! நம்மப் பொண்ணுக்கு புளியையாவது கரைச்சு குழம்பு வைக்கற வீரமாவது வரட்டும்!” செண்பகம் கவலையுடன் அவர் குடித்துவிட்டுத் தந்த காபி தம்ளரை வாங்கிக்கொண்டு சென்றாள். ‘இப்பவே இப்படின்னா... பொண்ணுக்கும், புருஷனுக்கும் ஊடல் வந்து பொண்ணை கைநீட்டி இரண்டு அடி அடிச்சதை கேள்விப்பட்டா அப்பவே உயிரை விட்ருவாப்போலிருக்கே! ஹூம்... இவளை சமாளிக்கறதே பெரிய விஷயமாயிருக்கும் போல...’ சந்தோஷமும், கவலையுமாய் அங்கலாய்த்தார் பட்டாபிராமன். குளித்துவிட்டு இடுப்பில் டவலோடு கண்ணாடி முன் நின்றான் கதிரேசன். கருத்த தேகம். திண்ணென்று புடைத்த தோள்கள். சுருள்முடி. களையான முகம். ‘என்ன குறை எனக்கு? சித்ராவிற்கு என்னை ஏன் பிடிக்கவில்லை? இந்த ஊரிலேயே எத்தனை வயசுப் பெண்கள் நான் அவர்களை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்கமாட்டேனா என்று ஏங்குகிறார்கள்? அவர்கள் கண்களுக்கு மன்மதனாய் தெரிகிற நான் சித்ராவின் கண்களுக்கு மட்டும் குரங்காய் தெரிகிறேனா? ஏன் சித்ரா என் மனதைப் புரிந்துகொள்ள மறுக்கிறாய்? நான் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன் தெரியுமா?’
© 2024 Pocket Books (Ebook): 6610000510764
Release date
Ebook: 13 January 2024
English
India